NEET UG 2023: விரைவில் நீட் இளநிலைத் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?
NEET UG 2023 Answer Key: நீட் இளநிலைத் தேர்வுக்காக விடைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
நீட் இளநிலைத் தேர்வுக்காக விடைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அறிவிக்கப்பட்டபடி நீட் தேர்வு மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதி விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு
தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுமைய அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதியவர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
மணிப்பூரில் வன்முறை காரணமாக நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால், அங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அங்கு நீட் தேர்வு நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு
கடந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 21 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதனால் இந்த முறை கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
விடைக் குறிப்பைப் பார்ப்பது எப்படி?
* நீட் தேர்வை எழுதியவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
* download answer key என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
* NEET UG 20223 answer key என்ற பெயரில் பிடிஎஃப் விடைக்குறிப்பு தோன்றும்.
* அதைத் தரவிறக்கம் செய்து, பிற்காலப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
தேர்வர்கள் ஒரு கேள்விக்கு ரூ.1000 செலுத்தி விடைக் குறிப்பு விடையை ஆட்சேபனை செய்யலாம் என்று கடந்த ஆண்டு தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.