Neet | நீட் தேர்வுக்கு அப்ளை பண்ணனுமா? இதுதான் செக்லிஸ்ட்.. இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க..
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு நேற்று (ஜூலை 13) மாலை 5 மணி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு நேற்று (ஜூலை 13) மாலை 5 மணி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.
இந்நிலையில், 2021- 22 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் அறிவித்தார்.
அதன்படி, https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் நேற்று மாலை 5 மணி முதல் தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியது. விண்ணப்பித்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக பேர் நீட் இணைய முகவரியை அணுகியதால் சிறிது நேரம் அந்த இணையபக்கமே முடங்கியது.
நீட் தேர்வுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தெரிந்துகொள்வோம்.
விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய கடைசி நாள் என்ன?
நீட் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல். ஆகஸ்ட் 7-அம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணத்தை நெட் பேங்கிங் முறையிலோ, டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தியோ, உபிஐ (UPI), பேடிஎம் சேவைகளைப் பயன்படுத்தியோ செலுத்தலாம். யுபிஐ சேவைக்கு எஸ்பிஐ, சிண்டிகேட், ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆகஸ்ட் 8 முதல் 12-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கான உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக கீழ்க்கண்ட ஆவணங்களை சாஃப்ட் காப்பியாக அதாவது குறிபிடப்பட்டுள்ள இமேஜ் அல்லது பிடிஎஃப் வடிவில் தயார் செய்து கொள்ளவும்.
1. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
3. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
5. ஆதார் அட்டை
6. பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்
7. விண்ணப்பதாரரின் கையொப்பம்
8. இடது கை கட்டைவிரல் ரேகை பதிவு
தமிழ்நாட்டில் 18 தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் 201 நகரங்களில் 3,862 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நீட் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், , திருச்சி, திருநெல்வேலி, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், கரூர், நாகர்கோவில், நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், சேலம் ஆகிய 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.