நீட் தேர்வு, பிளஸ் 2 முடிவு... திக் திக் வாரம்- தேர்வு முடிவுகள்தான்... வாழ்க்கை முடிவுகள் அல்ல!
உயிரைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அதைக் கொண்டு கடின உழைப்பு, விடா முயற்சியின்மூலம் வாழ்க்கையில் உயரங்களை அடையலாம்.
நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு நாளை (மே 7) நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 8) வெளியாகின்றன. இந்த நேரத்தில் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளுக்குப் பிறகும் தேர்வு முடிவுகளுக்குப் பிறகும் மாணவர்கள் மத்தியில் சில துயர சம்பவங்கள் நடப்பதைக் காண முடிகிறது. இதைத் தடுக்க வருங்காலம் குறித்த தெளிவை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை ஆகும். உயிரைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அதைக் கொண்டு கடின உழைப்பு, விடா முயற்சியின்மூலம் வாழ்க்கையில் உயரங்களை அடையலாம் என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களின் முடிவுக்கு என்ன காரணம்?
இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன், ''குழந்தை வளர்ப்பில், ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றுக்கும் சரி, சரி என்று சொல்லி பழக்கிவிடுகிறோம். 'இல்லை, வேண்டாம்!' என்ற சூழல் ஏற்படும்போது, அதை அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்வதில்லை. 'நான்தான் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் ஆகவில்லை. நீயாவது ஆகவேண்டும்' என்று தன்னுடைய எதிர்பார்ப்பைக் குழந்தை மேல் பூசுகிறோம். அவர்களின் விருப்பத்தை, ஆர்வத்தைக் காணாமல் கடந்து செல்கிறோம்.
அதேபோல கொரோனா காலத்தில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் பின்தங்கலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ளவில்லை. 'நீ படி, என்னன்னாலும் பரவால்ல, பார்த்துக்கலாம்!' என்று பெரும்பாலும் எந்தப் பெற்றோருமே சொல்வதில்லை.
ஒரு ரோஜா பூக்க, 50 கிலோ யூரியாவைப் போடுவது சரியா? உலகில் மெதுவாகக் கற்கும் குழந்தை, மிதமாக, விரைவாகக் கற்கும் குழந்தைகள், மாற்றுத் திறன் குழந்தைகள் என்று 4 விதத்தில்தான் குழந்தைகள் இருக்கின்றனர். இதைப் பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.
முதலில் இப்படிக் குழந்தைகள் இருக்கும் காரணத்தை நாம் ஏற்பதில்லை. கர்ப்ப கால பராமரிப்பு, மூளை கட்டமைப்பு, ஊட்டச்சத்து சரிவிகிதம், சத்துக் குறைபாடு ஆகியவற்றைத் தவறவிட்டு, நன்றாகப் படிக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் தேவநேயன்.
சமூக வலைதளங்களின் தாக்கம்
இதை வேறு விதமாக அணுகுகிறார் உளவியல் மருத்துவர் சரண்யா. ''இன்றைய தலைமுறையினர் கேட்ஜெட்டுகளுடன் செலவிடும் நேரம் மிக அதிகம். அதனால் தனிமையை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இன்ஸ்டாகிராம் மாதிரியான தளங்களில் பிரபலங்களைப் பின்தொடர்கிறார்கள். 'எனக்கு அவர்களைப்போன்ற கச்சிதமான வாழ்க்கை இல்லையே' என்று ஏங்குகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.
பள்ளிகளில் கட்டாயம் உளவியலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 500 மாணவர்களுக்கு ஓர் உளவியலாளர் இருக்கவேண்டும்.
பெற்றோர்களின் பங்கு
குழந்தைகளின் மீது அதிகமான எதிர்பார்ப்பைத் திணிக்கக் கூடாது. தன் குழந்தை குருவியா, குரங்கா, யானையா என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 'நீ மருத்துவர் ஆவாய் என்று நினைத்தேன்!' என்று, சராசரியான குழந்தையைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்ப்பைத் திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
என்ன நடந்தாலும் வாழலாம்
இறுதியாக எல்லோருக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இந்தக் காரணத்தால் இறந்துபோகலாம் என்று உலகில் ஒரு காரணம் கூடக் கிடையாது. என்ன நடந்தாலும் வாழலாம் என்னும் தைரியம் ஒவ்வொரு மாணவருக்கும், இளைஞர்களுக்கும்.. அனைவருக்குமே வர வேண்டும். நாம் இல்லாவிட்டால், நமது குடும்பத்தினரைப் பிறர் எப்படி நடத்துவர் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
சக மாணவர்களில் யாராவது தனிமையாக, சோர்வாகக் காணப்பட்டால், அவர்களிடம் சென்று பேசி ஊக்கப்படுத்த வேண்டும். தயக்கமின்றி 1098 என்ற எண்ணை, எந்த நேரத்திலும் அழைத்துப் பேசலாம்'' என்கிறார் மருத்துவர் சரண்யா.
என்ன செய்ய வேண்டும்?
* நடந்தது நடந்துவிட்டது; இதை மாற்ற முடியாது என்பதைக் குழந்தைகளுக்குத் தெளிவாகப் புரியவைக்க வேண்டும்.
* குற்ற உணர்ச்சியோ, பய உணர்ச்சியோ எதையும் மாற்றாது, அடுத்தது என்ன என்று காண்பதே சரி என உணர்த்த வேண்டும்.
* எதிர்காலத்தை நோக்கிய நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும்.
* தேவையான வழிகாட்டல்களை வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும்.
எல்லாவற்றையும்விட ஓர் உயிர் முக்கியம். மாணவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு விடை கொடுப்பதில், அரசு, பள்ளி, பெற்றோர், ஊடகங்கள் என அனைத்துக்கும் கூட்டுப் பங்கு உள்ளது. இதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டியது அவசர, அவசியம்.