NCERT Textbooks: தேச பக்தியை வளர்க்க பள்ளி பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம்: என்சிஇஆர்டி குழு பரிந்துரை
இதன் மூலம் மாணவர்கள் ராமர் உள்ளிட்டோர் குறித்து அறிந்துகொள்ளவும் காவியத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள்ளவும் முடியும்.
பள்ளி பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைச் சேர்க்க வேண்டும் என்று என்சிஇஆர்டி உயர்மட்டக் குழு பரிந்துரை அளித்துள்ளது.
என்சிஇஆர்டி சமூக அறிவியல் பாடத்திட்டக் குழு பேராசிரியர் சிஐ ஐசக் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தக் குழு தற்போதைய சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைப் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி வரலாறு பாடம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். அவை பாரம்பரிய, இடைக்கால, பிரிட்டிஷ் மற்றும் நவீன இந்தியா என்று பிரிக்கப்பட்டு, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைச் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தி, பெருமித உணர்வை வளர்க்க இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைவர்களின் வரலாறு
மேலும், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேதங்கள் குறித்தும் ஆயுர்வேதம் தொடர்பாக பாட நூல்களைச் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை அனைத்துக்கும் என்சிஇஆர்டி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக என்சிஇஆர்டியில் 19 பேர் அடங்கிய தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் குழு கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவே அனைத்து வகுப்புகளுக்குமான என்சிஇஆர்டி பாடத்திட்டம், நூல்கள், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை இறுதி செய்யும். இந்த நிலையில், சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை இந்தக் குழுவே ஆய்வு செய்து, இறுதி செய்ய உள்ளது.
பாரம்பரிய இந்தியா
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராசிரியர் ஐசக், ‘’இதுநாள் வரை இந்திய வரலாறு, இடைக்கால, பிரிட்டிஷ் மற்றும் நவீன இந்தியா என மூன்றாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது பாரம்பரிய இந்தியா என்று புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை அதில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளோம்.
இதன் மூலம் மாணவர்கள் ராமர் உள்ளிட்டோர் குறித்து அறிந்துகொள்ளவும் காவியத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள்ளவும் முடியும்.
ஒவ்வொரு வகுப்பறையின் சுவரிலும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை, அந்தந்த உள்ளூர் மொழிகளில் எழுதி வைக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்’’ என்று ஐசக் தெரிவித்துள்ளார்.
பாரத் பெயர்
முன்னதாக, அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என என்சிஇஆர்டி விளக்கம் அளித்தது.
பிற நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் வரலாறு மற்றும் இதிகாசங்கள் தமிழ் மொழியில் பாடத்திட்டமாக இருக்கின்றன. இதற்கிடையில் 2021ஆம் ஆண்டு, சவுதி அரேபிய அரசு இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தங்களுடைய பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.