Tamil Medium: இனி சிபிஎஸ்இ, கே.வி. பள்ளிகளில் தமிழ் மீடியம்; அரசு அதிரடி முடிவு- என்ன காரணம்?
இனி சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மீடியத்திலும் படிக்கலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இனி சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மீடியத்திலும் படிக்கலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. கற்றலில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ், சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, ஏகலவ்யா மாதிரிப் பள்ளிகள், நவோதயா உள்ளிட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட 22 அட்டவணை மொழிகளில் (உள்ளூர் மொழிகளில்) பாடங்களைக் கற்பிக்க வேண்டும். இதற்காகப் பாட நூல்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கற்றலில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய கல்விக் கொள்கை அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ கல்விப் பிரிவின் இயக்குநர் ஜோசப் இம்மானுவேல், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கும் கேந்திரிய வித்யாலயா, ஏகலவ்யா மாதிரிப் பள்ளிகள், நவோதயா பள்ளி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
’’பன்மொழிக் கல்வி மொழியியல் பன்முகத் தன்மையை வளர்ப்பதற்காகவும் கலாச்சார புரிதலுக்காகவும் மதிப்புமிக்க அணுகுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களுக்கு குறிப்பாக இளம் மாணவர்களுக்கு பன்மொழிக் கல்வியியலை அறிமுகம் செய்தால், கற்றல் திறன் மேம்படும்.
உள்ளூர் மொழி, தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை முடியும்போதெல்லாம் பயன்படுத்தும்படியும் தேசிய கல்விக் கொள்கை அறிவுறுத்தி உள்ளது.
எனினும் இதை மேற்கொள்ளும்போது திறன் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது, பன்மொழி பாடப் புத்தகங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து யோசிக்க வேண்டியது முக்கியமாகிறது. ஆனாலும் உயர் கல்வித்துறை இதை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே பொறியியல், மருத்துவம், தொழில் திறன், சட்டம் ஆகிய உயர் படிப்புகளுக்கு, மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அடிப்படைக் கல்வியில் இருந்தே தாய்மொழிக் கல்வி என்பது மாணவர்கள் மத்தியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கருத்தில்கொண்டு என்சிஇஆர்டி 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அதாவது, அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை மொழிமாற்றம் செய்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பயிற்று மொழியாக தாய்மொழி என்பது, பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே வடிவில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு சிபிஎஸ்இ கல்விப் பிரிவின் இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.