CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மொகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மொகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் இந்த ஆண்டிலேயே அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில வாரியமும் இந்த அறிவிப்பைப் பின்பற்ற உள்ளது.
நாடு முழுவதும் மத்திய, மாநிலக் கல்வி வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்தியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவும், மாநிலக் கல்வி வாரியங்கள் தங்களுக்கு உகந்த வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்குகின்றன. என்சிஇஆர்டி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன.
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அவை பாடத்திட்டத்தை மாற்றுகின்றன. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மொகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் 2023- 24ஆம் ஆண்டிலேயே அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில வாரியமும் இந்த அறிவிப்பைப் பின்பற்ற உள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் கூறூம்போது, நாங்கள் என்சிஇஆர்டி புத்தகங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் என்ன உள்ளதோ, அதையே பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.இதில் முகலாயர்களின் வரலாறு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்தில், இடைக் கால வரலாறு பகுதியில் உள்ள 'Kings and Chronicles' மற்றும் 'The Mughal Courts' ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 2023- 24ஆம் ஆண்டு முதல் மாநிலப் பாடப் புத்தகங்களில் திருத்தப்பட்ட என்சிஇஆர்டி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சோஷியலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி குறித்த பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பாடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சிபிஎஸ்இ தன்னுடைய பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதாக 2022-ன் ஆரம்பத்தில் அறிவித்தது. சில மாநிலக் கல்வி வாரியங்களும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
2022-ல் நீக்கப்பட்ட பாடங்கள்
அணிசேரா இயக்கங்கள், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய பேரரசுகளின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து சிபிஎஸ்இ நீக்கியது.
இதேபோல், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் இருந்து, "உலகமயமாக்கலால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்ற தலைப்பும் கைவிடப்பட்டுள்ளது. 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' பகுதியில் ஃபைஸ் அகமது ஃபைஸின் உருது மொழியில் இரண்டு கவிதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.