இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் நாடுகள்: நிதி ஆயோக் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்!
இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக இப்போதும் அமெரிக்காவே உள்ளது. 2023-24 கல்வியாண்டில் மட்டும் சுமார் 3,31,602 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர்.

இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்த புதிய ஆய்வறிக்கையை நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ளது. 'இந்திய உயர்கல்வியின் சர்வதேச மயமாக்கல்' (Internationalisation of Higher Education in India) என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், இந்திய மாணவர்களின் விருப்பமான நாடுகளாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) ஆகியவை நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா
இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக இப்போதும் அமெரிக்காவே உள்ளது. 2023- 24ஆம் கல்வியாண்டில் மட்டும் சுமார் 3,31,602 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். இது அங்குள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் 29 சதவீதமாகும். இதன் மூலம், அமெரிக்காவிற்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகள் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
குறிப்பாக கலிஃபோர்னியா, நியூயார்க் மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த படிப்புகளில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வேகமாக வளரும் கனடா
கடந்த பத்தாண்டுகளில் கனடாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 48.7% அதிகரித்துள்ளது. 2023-ல் அங்குள்ள சர்வதேச மாணவர்களில் 42.9% பேர் இந்தியர்களே. படிப்பு முடித்த பின் மூன்று ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதிக்கும் 'Post- Graduation Work Permit' மற்றும் விரைவான விசா நடைமுறைகள் மாணவர்களைப் பெருமளவில் ஈர்க்கின்றன. கல்வித் துறை மூலம் கனடா அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 30.9 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஈர்ப்பு
ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1.2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெற்றவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அந்நாட்டின் தற்காலிக பட்டதாரி விசா மற்றும் திறன் அடிப்படையிலான குடியேற்றக் கொள்கைகள் இந்திய மாணவர்களுக்குச் சாதகமாக உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம்
குறைந்த கல்விக் கட்டணம் மற்றும் தரமான ஆராய்ச்சி படிப்புகளுக்காக ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் லாட்வியா போன்ற ஐரோப்பிய நாடுகளை இந்திய மாணவர்கள் இப்போது ஒரு மாற்றாகக் கருதுகின்றனர். குறிப்பாக 'EU Blue Card' வசதி மற்றும் அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மாணவர்களை அந்த நாடுகளை நோக்கி நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.






















