Guest Lecturers Protest: கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; என்னதான் தீர்வு?- அமைச்சர் பொன்முடி பேட்டி
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமன விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமன விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
பி.எட். கலந்தாய்வை சென்னையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
’’பி.எட். கலந்தாய்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 12 முதல் 17ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். 7 பி.எட். அரசுக் கல்லூரிகள் மற்றும் 14 பி.எட். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு முதல் பி.எட். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
கடந்த காலங்களில் எம்ஃபில் முடித்தவர்கள் கூட துணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் விளைவாக, தகுதி குறைவான கவுரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. யுஜிசி விதிமுறைகளின்படி நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் துணை பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். அல்லது அவர்கள் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் 5,353 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 3,391 பேர் மட்டுமே யுஜிசி விதிமுறைகளுக்கு ஏற்ற கல்வித் தகுதியுடன் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் தகுதி இல்லாதவர்களும் கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . அப்போது அந்தந்தக் கல்லூரி முதல்வர்களே கவுரவப் பேராசிரியர்களை நியமித்து வந்தனர். அந்த குறைபாடுகளை எல்லாம் நீக்கி முழுமையாக தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஒரே ஆண்டில் 4,000 கல்லூரி நிரந்தர விரிவுரையாளர்களுக்காக தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்னதாக, 2007 முதல் 2015 வரை எட்டு ஆண்டுகளில், 4,654 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது ஒரே ஆண்டில் நான்காயிரம் பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களும் எழுதலாம். அவர்களுக்கு 15 % கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
உயர் கல்வித் துறை மற்றும் அரசின் நிதிச் சூழலை விரிவுரையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன். அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
அதேபோல 1895 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட உள்ளார்கள். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியம், மாற்றம் இன்றி வழங்கப்படும். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோர், வேலையில் இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம். அரசு உதவி பேராசிரியராக ஆகலாம்’’.
இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.