(Source: ECI/ABP News/ABP Majha)
MBBS in Tamil: புதுச்சேரியிலும் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு; பணிகள் தீவிரம் - ஆளுநர் தமிழிசை பேட்டி
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மூத்த குடிமக்களை கெளரவிக்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது, ’’என் தந்தையை என்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளேன். கர்நாடகாவில் கன மழை காரணமாக பால் வரத்து குறைந்ததால் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம். மருத்துவப் படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னதாகவே தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டோம். நாட்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வந்ததுபோல, புதுச்சேரியிலும் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இங்கு முழுமையான தமிழ் மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் படிக்கும் ஏற்பாடு செய்து தரப்படும். இதற்காகப் புத்தகம் தயாரிக்கும் பணிக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்திற்கு உள்ளாக தமிழில் மருத்துவக் கல்வி புத்தகங்களைத் தயாரிக்க அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மருத்துவக் கல்வியோ, பொறியியல் கல்வியோ தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். ஜெர்மன், சீனா உள்ளிட்ட நாடுகளில் இவ்வாறுதான் கற்பிக்கப்படுகிறது. அதனால் மாணவர்களிடையே புரிந்து கொள்ளும் திறனும் அதிகமாக உள்ளது. தாய்மொழியில் குறிப்பாகத் தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி விரைவில் கொண்டு வரப்படும்’’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
பின்னணி என்ன?
நாட்டிலேயே முதல் முறையாக, மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அக்டோபர் 16ஆம் தேதி போபாலில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டது.
மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி
இதற்கிடையே மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக்குழு, இதுகுறித்த பேச்சுவார்த்தையை தேசிய மருத்துவ ஆணையத்துடன் நடத்தி வருகிறது. அத்துடன் மாநில மருத்துவ ஆணையம், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மாநில மொழிகளில் மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர் நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி பேசியபோது, ’’தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ளார்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.