EXPLAINED: எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே கலந்தாய்வு; மருத்துவ ஆணையம் பரிந்துரை சரியா? ஓர் அலசல்
மருத்துவப் படிப்புகளில் சேர பொதுக் கலந்தாய்வு முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர பொதுக் கலந்தாய்வு முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது.
மாநிலக் கலந்தாய்வு எப்படி?
இதில் மாநிலக் கலந்தாய்வு அந்தந்த மாநில அரசால் நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர) இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை மாநிலக் கலந்தாய்வின் மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களை தமிழக அரசே நேரடியாக நிரப்புகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50% இடங்கள் மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. மாநிலக் கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் மூலம் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
புதிய ஒழுங்குமுறை
இதுநாள் வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே நேரடியாகக் கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து இந்த நடைமுறைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய அரசிதழில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் மருத்துவப் படிப்பில் சேர, இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த புதிய ஒழுங்குமுறைகள் அனைத்தும் பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் ( GMER-23) என்று அழைக்கப்பட உள்ளன.
தேசிய மருத்துவ ஆணையம் கொடுக்கும் மருத்துவ இடங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். தேவைப்பட்டால் பல கட்டங்களாக இந்தக் கலந்தாய்வு நடைபெறும். பொதுக் கலந்தாய்வுக்கான விரிவான விதிமுறைகளை இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் வெளியிடும். வெளியாகும் விதிமுறைகளின்படி, கலந்தாய்வை நடத்த மத்திய அரசு சார்பில் அதிகாரி நியமிக்கப்படுவார்.
எந்தவொரு மருத்துவக் கல்வி நிறுவனமும், இந்த விதிமுறைகளை மீறி எந்தவொரு மாணவரையும் தங்களின் நிறுவனத்தில் அனுமதிக்கக் கூடாது.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்தாத கல்வி நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒட்டுமொத்த படிப்புக்கும் ஆகும் தொகை வசூலிக்கப்படும். இதில் எது அதிகமோ அது பெறப்படும். இரண்டாவது முறை ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படும்.
அதற்குப் பிறகும் விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெற்றது கண்டறியப்பட்டால், மாணவர் அல்லது மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர். அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு இடங்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு நீக்கப்படும்’’ என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாக அறிய: https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/246254.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கலந்தாய்வைத் தடுத்து நிறுத்துவோம்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுக் கலந்தாய்வு குறித்துக் கூறும்போது, ''மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். கடந்த மாதம் பொதுக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பால், 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். வட மாநில, வடகிழக்கு மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க நேரிடும். தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கே படிக்க வாய்ப்பில்லாமல் போகும். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகும். இது ஜனநாயக விதிகளை மீறியதாக அமையும்.
பொதுக் கலந்தாய்வு சட்டத்துக்குப் புறம்பானது என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பினோம். இந்த ஆண்டு பொதுக் கலந்தாய்வு இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் திடீரென 2 நாட்களுக்கு முன்பு, பொதுக் கலந்தாய்வு என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எப்படியேனும் அந்தக் கலந்தாய்வைத் தடுத்து நிறுத்துவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
கல்வியாளர்கள் சொல்வது என்ன?
ஒற்றைச் சாளர முறையில், மையப்படுத்தப்பட்டபொதுக் கலந்தாய்வு மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பாதிக்கப்படலாம். தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளனது. மத்திய அரசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் (ஈடபிள்யூஎஸ்) ஒதுக்கீடு அமலாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்திய இறையாண்மையின் தோல்வி
தனித்தனியாக மத்திய, மாநிலக் கலந்தாய்வுகள் நடத்தப்படுவதன் மூலம், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குக் கால விரையம் ஏற்படும். மன உளைச்சல் உண்டாகும் என்று புகார் எழுந்துள்ளதால், பொதுக் கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் பொது மருத்துவக் கலந்தாய்வு என்பது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையை செல்லாக் காசாக்கும் முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்கும் இந்திய இறையாண்மைக்கும் ஏற்படும் தோல்வி என அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முறைகேடு நடக்க வாய்ப்பு
''28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைப்பிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று சேர முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில அளவில் கலந்தாய்வு நடந்தால் மட்டும்தான் அத்தகையவர்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியும். ஒற்றைக் கலந்தாய்வால் இதை செய்ய முடியாது'' என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு- ஒரே தேர்தல், ஒரே நாடு- ஒரே ரேஷன், ஒரே நாடு- ஒரே வரி (ஜிஎஸ்டி) என்ற வரிசையில் ஒரே நாடு- ஒரே நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை (க்யூட் தேர்வு) அறிமுகம் செய்தார் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார்.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ள சூழலில், மத்திய அரசின்கீழ் மருத்துவக் கலந்தாய்வும், ஒரே நாடு- ஒரே கலந்தாய்வு என்று மாறிவிடக் கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.