மீண்டும் பள்ளிக்கு வந்து பாடம் எடுத்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் - எங்கே? எப்படி தெரியுமா?
சீர்காழியில் ஆசிரியர் தினத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் ராதாகிருஷ்ணனாக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன்.
சீர்காழியில் ஆசிரியர் தினத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் ராதாகிருஷ்ணனாக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சனின் செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஆசிரியர்கள்
சுயநலம் மிக்க இந்த உலகில் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி தாய், தந்தையை காட்டிலும் நமது வெற்றியை கண்டு உச்ச மகிழ்ச்சியை அடைபவர் யார் எனில் அது ஆசிரியர்களே. அம்மாவின் இடுப்பை விடுவித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து பால்வாடிக்கு செல்லும் குழந்தையை, தாயை போல் கவனித்து அரவணைக்கும் டீச்சர் முதல், பட்ட படிப்பு வரை நம்மை செதுக்குவதில் நமது ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
வழிகாட்டி
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஒன்றுமே தெரியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளை ஒரு பொக்கிஷ புத்தகமாக மாற்றுவதே ஆசிரியர்கள் தான். ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவையும் ஒரே இடத்தில் இருந்து மாணவர்களுக்கு சொல்லி தருபவர்கள். நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு கிடைத்த ஒரு அறிய புதையல் தான் ஆசிரியர்கள்.ஏன் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் ஆசிரியர் தான். சிறிய மண்புழு கூட மண்ணை எப்படி உரமாக்குவது என்பதை கற்று தருகிறது. “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்னும் பழமொழியை வைத்து, மனிதன் ஆறு அறிவுடன் பிறந்திருந்தாலும் அவனுடைய அறிவை பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி தான் ஆசிரியர்கள்.
ஒரு குழந்தையை வருங்காலத்தில் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். ஒரு மனிதனுக்கு கல்வி அறிவை கற்று தரும் இடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்படி நம்மை உருவாக்கும் ஆசிரியர்களை நாம் போற்றி வணங்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல பண்புகளையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கற்று தருகின்றனர். ஒரு தவறான மாணவனை கூட நல்ல மாணவனாக வழிநடத்தும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு.
“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்”
என்ற பழமொழிக்கேற்ப ஒரு மனிதனுக்கு யாரெல்லாம் கல்வியறிவை கற்றுத் தருகிறார்களோ அவர்களெல்லாம் இறைவனுக்கு நிகரானவர்கள் என்று கூறப்படுகிறது. அதுபோல, ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பன். நாம் கற்கும் கல்வியை தவிர இந்த உலகிலுள்ள அனைத்தும் அழியக்கூடியவை. அழிவில்லா கல்வியை கற்று தரும் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும். ஆனால் கல்வி செல்வமானது அழிவில்லா செல்வமாகும். அந்த கல்வி செல்வத்தை அள்ளித் தரும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
தாயின் கருவறையை போன்றே வகுப்பறையும் புனிதமானது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சாதி, மொழி, இன வேறுபாடுகள் கிடையாது. அந்த இன வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்களை உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். களி மண்ணாய் இருக்கும் மாணவர்களை ஒரு சிலையாக வடிவமைப்பவர்கள் தான் ஆசிரியர்கள். ஒரு குழந்தையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றோர்கள் என்றால், அந்த குழந்தைக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்துபவர்கள் தான் ஆசிரியர்கள். ஒரு குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
ஆசிரியர் குணம்
ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒரு தாய், தந்தையை போல, ஒரு சிறந்த நண்பனை போல இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும். ஒரு சாதாரண மாணவனை நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை வார்த்தைகளால் சாதனையாளனாக மாற்ற வேண்டும். நேர்மையான எண்ணங்களை மாணவர்களின் மனதில் பதியவைக்க வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் புன்னகை தவழும் முகத்துடன் பேசி பழகவேண்டும்.
ஆசிரியர் தினம்
கருங்கல்லாக இருந்த நம்மை அன்பால், அறிவால், அதட்டலால், நம்மை சிற்பமாக செதுக்கி ஆளாக்கிய ஆசிரியர்களை கொண்டாடும் வகையில் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் அனைவரும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே சட்டநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக தாமஸ் ஜெபர்சன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வித்தியாசமாக ஏதாவது செய்து பாடம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக அப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மீது மிகுந்த பற்று. மேலும் அவர் தேசப்பற்றயும், தேச தலைவர்களையும் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள அவர்களின் பிறந்த நாளில் அவர்களை போன்று பாரதியார், காமராஜர், காந்தியடிகள் என வேடம் அணிந்து பள்ளிக்கு வந்து அன்றையதினம் முழுவதும் அந்த தலைவர்கள் போலவே நடந்து கொள்கிறார். இதன் மூலம் தலைவர்கள் பற்றிய புரிதலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துக்கொள்வது மட்டும் இன்றி அவர்களை பற்றி எளிதாக அறிய முடிகிறது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக அவர் தனது சொந்த பணத்தில் பல ஆயிரங்கள் செலவு செய்து உடைகள் உள்ளிட்ட மாறுவேடத்திற்கான பொருட்களை வாங்கி வருகிறார்.
இந்த சூழலில் நேற்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக நாடுமுழுவதும் கொண்டாப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேடம் அணிந்து பள்ளி வந்து மாணவர்கள் மத்தியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து அன்றை தினம் ராதாகிருஷ்ணனாக மாணவர்கள் மத்தியில் நடந்துக்கொண்டார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், இதுபோன்ற அறப்பணி உடன் பல ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை அறப்பணியாக கருதி வருவது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.