Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
2 தலைமை ஆசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னையில் பணி பெறுவதற்குத் தீவிர முயற்சி எடுத்தனர்.
சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரத்தின் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இரண்டு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகா விஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சு
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளர் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம். மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசி இருந்தார்.
மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இந்தக் கருத்துகள் வைரலான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் தவறு இழைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
தொடர்ந்து அசோக் நகர் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இரு தலைமை ஆசிரியர்களுக்கும் பணியிட மாற்றம்
ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்டன.
எனினும் 2 தலைமை ஆசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னையில் பணி பெறுவதற்குத் தீவிர முயற்சி எடுத்தனர். இருவருக்கும் ஆதரவாக ஆசிரியர் இயக்கங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றெல்லாம் கூறப்பட்டது.
மீண்டும் சென்னைக்கே மாறுதல்
இந்த நிலையில், தலைமை ஆசிரியர்கள் தமிழரசி மற்றும் சண்முக சுந்தரத்தின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையாறு ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சண்முகசுந்தரம், அடையாறு ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை பணியில் சேர்கின்றனர்
இந்த 2 ஆசிரியர்களும் நாளை மறுநாள் (செப்.27) பணியில் சேர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.