Bilingual Textbooks | மராத்திவழி பள்ளிகளில் ஆங்கிலத்தோடு கூடிய இருமொழிப் புத்தகங்கள்: அரசு அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வரும் மராத்தி மொழி வழிப் பள்ளிகளில், ஆங்கிலத்தோடு கூடிய இருமொழிப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வரும் மராத்தி மொழி வழிப் பள்ளிகளில், ஆங்கிலத்தோடு கூடிய இருமொழிப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மகாராஷ்டிர மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் இதுகுறித்துப் பள்ளிகளில் மூத்த கல்வி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மராத்தி வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களுடன் ஆங்கில எழுத்துகளும் அச்சிடப்பட்டிருக்குமாறு, கூடுதல் தரமுள்ள புத்தகத்தை அளிக்குமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் அடிப்படையான ஆங்கில சொற்களஞ்சியம், இலக்கணம் மற்றும் வாக்கியம் அமைப்பது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வர்." என்று தெரிவித்துள்ளார்.
We are committed to the introduction of integrated & bilingual textbooks in all Marathi medium schools from the next academic year 1st Std. onwards. Reviewed the preparedness of the initiative with senior department officials today. pic.twitter.com/Ulqw5XM66w
— Prof. Varsha Eknath Gaikwad (@VarshaEGaikwad) January 13, 2022
முன்னதாக மகாராஷ்டிராவில் உள்ள 488 மாதிரிப் பள்ளிகளில் இந்தத் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக் கல்வித் துறையில் மகாராஷ்டிர மாநிலம் ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள, கல்வி தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தகவல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர், பள்ளிக் கல்விக்கான திட்டங்களை வகுப்பர். பள்ளிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான ஆலோசனைக் குழுவாக அந்த அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தகல்வி தொழில்நுட்ப மையத்தை அண்மையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்