Madras University: சென்னை பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வழங்க நிதிப் பற்றாக்குறை?- துணைவேந்தர் விளக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வழங்க நிதிப் பற்றாக்குறையா என்பது பற்றித் துணை வேந்தர் கெளரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வழங்க நிதிப் பற்றாக்குறையா என்பது பற்றித் துணை வேந்தர் கெளரி விளக்கம் அளித்துள்ளார்.
பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டங்களை வழங்கினார். இதில் 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களில் தகுதியான சிலருக்கு தங்கப் பதக்கம் வழங்கவில்லை. இதற்கு நிதிப் பற்றாக்குறை காரணம் என்று புகார் எழுந்தது. இதுகுறித்து துணைவேந்தர் கெளரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ''இது தவறான தகவல். இன்றைய விழாவில் தகுதியான நபர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. யாரேனும் விடுபட்டிருந்தால் நேரில் வந்து தகவல் சொல்லலாம். இதற்கும் மற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சான்றிதழோ, பரிசோ, பதக்கமோ யாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோ அவர்கள் அனைவருக்கும் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது'' என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.
வேறு இடத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது ஏன்?
பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த துணைவேந்தர் கெளரி, ‘’163 ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த முறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு பதிலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனால் பெரிய அரங்கை எதிர்பார்த்து வந்திருந்த பெற்றோர்கள் சிலர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். இங்குள்ள அரங்கம் சிறியது. அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் என்று வந்திருக்கலாம்’’ என்று துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கிப் பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருவதாகப் புகழாரம் சூட்டினார்.
அதேபோல விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாள் இன்று. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் படித்த பல்கலை. இது. நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இங்கு படித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் விஜயலட்சுமி ரெட்டி உட்பட பல சிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா இங்கு படித்தவர்தான். நானும் இதே பல்கலை.யைச் சேர்ந்தவன்தான். அந்த வகையில் சீனியராக இன்று இங்கு வந்துள்ளேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.