M.Ed Admission: அரசு கல்லூரிகளில் M.Ed : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக ஓராண்டுகள் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வந்த பி.எட்., கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், எம்.எட். எனப்படும் முதுகலை கல்வியியல் படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 60 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூபாய் 2 செலுத்தினால் போதும்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, புதுக்கோட்டை, ஒரத்தநாடு, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 7 கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கு வரும் அக்டோபர் 13-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மாணவர்கள் விண்ணப்பிக்க : https://www.tngasaedu.in//index.php என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்பில் சேர்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை அறிந்து கொள்ள https://www.tngasaedu.in//pdf/TNGASA-Required-Documents.pdf என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு இந்த முதுகலை கல்வியியல் பட்டம் மிகுந்த உதவிகரமாக உள்ளது. குறிப்பாக, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்கு முதுகலைப் பட்டம் மிகுந்த அவசியமாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் முறையாக இயங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும், தேர்வுகளும், வகுப்புகளும் கொரோனா சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட கல்லூரி வகுப்புகள் கடந்த மாதம்தான் தொடங்கப்பட்டது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.