ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்; பிறந்தநாள் விழாவில் தீர்ந்த கணவன், மனைவி பிரச்னை
பயிற்சி மட்டுமே குறிக்கோளாக இருந்த நிலையில் மனைவிக்கும், பயிற்சி ஆசிரியர் கவின் குமார் இருவருக்கும் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது.
கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள். ஆசிரியரின் பெண் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவை விதவிதமாக கொண்டாடிய மாணவர்கள்.
கரூர்- ஈரோடு சாலை பாலிடெக்னிக் பகுதியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் எஸ்ஐ தேர்வுக்கான மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தனது பயிற்சி ஆசிரியர் கவின் குமார் மாணவர்களுக்கு குறைந்த செலவில் கேண்டீன் வைத்து மூன்று வேளையும் உணவு தயாரித்து வருகிறார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வரும் பயிற்சி ஆசிரியருக்கு மாணவர்கள் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர். அப்போது பயிற்சி ஆசிரியருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு நீண்ட நாட்களாக மனைவி புவனா மற்றும் சஞ்சனா மகளை சந்திக்காமல் பயிற்சி மட்டுமே குறிக்கோளாக இருந்த நிலையில் மனைவிக்கும், பயிற்சி ஆசிரியர் கவின் குமார் இருவருக்கும் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனை உணர்ந்த பயிற்சி மாணவர்கள் ஆசிரியர் கவின் குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து ஆசிரியரின் பெண் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவை கல்லூரியில் ஏற்பாடுகள் செய்து பரமத்தியில் உள்ள பயிற்சி ஆசிரியர் மனைவி மற்றும் மகளை அழைத்து வந்து ஆசிரியர் கவின் குமாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக வான வேடிக்கை பட்டாசுகளை வைத்து கொண்டாட்டத்தை ஈடுபட்ட நிலையில் பிரமாண்ட கேக் தயார் செய்து பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
மாணவர்கள் இணைந்து பயிற்சி ஆசிரியர்களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் பிறந்தநாள் குழந்தைக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். எந்த நேரமும் மாணவர்கள், மாணவர்கள் என்ற நினைப்பில் இருப்பதால் குடும்பத்தை கவனிப்பது இல்லை என குற்றச்சாட்டை நான் வைத்தது உண்டு. இங்கு வந்து பார்க்கும் பொழுது எனது கணவரின் உழைப்பு மற்றும் உன்னதமான பணி தெரிகிறது. இனி நான் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன். மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே முக்கியம் என கருதி பணியாற்றி வரும் எனது கணவருக்கு எனது வாழ்த்துக்களையும், தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.
பயிற்சி பள்ளி மாணவனின் ஒருவர் பேசும் பொழுது, “எங்கள் பயிற்சி ஆசிரியர் எங்களுக்கு அளித்து வரும் உற்சாகம் மற்றும் உணவு அளித்த பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நாங்கள் எங்கள் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்து தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். பயிற்சி ஆசிரியர் பயிற்சியின் போது ஆசிரியராகவும், பயிற்சிக்கு பின் நல்ல நண்பனாகவும், உணவு வாங்குவதில் நல்ல தந்தையாகவும் திகழ்கிறார். இத்தகைய பயிற்சி பள்ளியில் படிப்பது எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
சில கல்லூரிகளில் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பனிப்போர் இருந்து வரும் நிலையில் கரூர் பாலிடெக்னிக் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ் அகாடமியில் மாணவர்களுக்காக பணியாற்றி வரும் பயிற்சி ஆசிரியருக்காக, ஆசிரியரின் பெண் பிள்ளை முதல் பிறந்தநாள் விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடிய மாணவர்களை பாராட்ட தானே வேண்டும்.