Kalai Thiruvizha: கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்: முதல்வர் கையால் நாளை பரிசு!
அரசுப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாளை (ஜனவரி 12) முதல்வர் பரிசுகளை வழங்க உள்ளார்.
அரசுப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாளை (ஜனவரி 12) முதல்வர் பரிசுகளை வழங்க உள்ளார்.
முதல்வர் முன்னெடுப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டன.
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி அளவிலான போட்டிகள்
முதற்கட்டமாக பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். மாநிலப் போட்டியானது அரையாண்டு விடுமுறையில் டிசம்பர் 27 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
மாநில அளவிலான கலை திருவிழா போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, இட வசதி, உணவு, மாணவர் பாதுகாப்பு, ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
இந்த நிலையில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நாளை (ஜனவரி 12) நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளர். சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.