Greenfield Universities: தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஒப்புதல்; முழு விவரம்..
தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பி.எட். கலந்தாய்வை சென்னையில் நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ’’பி.எட். கலந்தாய்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 12 முதல் 17ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். 7 பி.எட். அரசுக் கல்லூரிகள் மற்றும் 14 பி.எட். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு முதல் பி.எட். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
கடந்த காலங்களில் எம்ஃபில் முடித்தவர்கள் கூட துணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் விளைவாக, தகுதி குறைவான கவுரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. யுஜிசி விதிமுறைகளின்படி நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் துணை பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். அல்லது அவர்கள் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ''தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்கள் (Greenfield universities) அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
100 ஏக்கர் நிலம், 50 கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ள அமைப்புகளோ அறக்கட்டளைகளோ பசுமை பல்கலைக்கழகம் அமைக்க, தமிழக அரசிடம் விண்ணப்பிக்கலாம். அதன்படி பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு சார்பில் 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 6 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.
பசுமை பல்கலைக்கழகம் என்றால் என்ன?
பசுமை பல்கலைக்கழகம் என்பது தனியார் பல்கலைக்கழகங்களில் ஒரு வகை ஆகும். தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019-இன் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளன.
பசுமை பல்கலைக்கழகங்கள், தங்களுக்குத் தேவையான பாடப் பிரிவுகளை உருவாக்கி, அவற்றுக்கான கட்டணத்தைத் தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம். தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, மாணவர் சேர்க்கையையும் நடத்திக் கொள்ளலாம்.
மாநிலத்தின் முதல் பசுமை பல்கலைக்கழகமாக, சென்னையில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தப்பட்டு, மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதி பெற்ற 6 பல்கலைக்கழகங்களில் சவீதா பல்கலைக்கழகம் மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Kendriya Vidyalaya Admission: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்; முழு விவரம்