புதுச்சேரியில் 1 முதல் பிளஸ் 2 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: பள்ளி வேலை நேரத்தில் முக்கிய மாற்றம்!
புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: பள்ளி வேலை நேரம் மாற்றம்
புச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது நிலையில் பள்ளி வேலை நேரம் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுவைக்குத் தனிக் கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014 - 15ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ, பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. அது காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்து. இவ்வாறு கடந்த 2018 - 19 கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்புக்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
6ஆம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. புதியக் கல்விக் கொள்கையை அமலாக்கவே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமலாக்குவதாக தெரிவித்தனர்.
அதனையொட்டி, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 9, மற்றும் 11-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ அமலானது. 10, 12ம் வகுப்புகள் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத் திட்டத்தில் இருந்தன. புதுச்சேரியில் 127 அரசுப் பள்ளி சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறின. இந்த கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை முற்றிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நேரம் மாற்றம்
காலை 9 மணி முதல் 9.15 இறைவணக்கக் கூட்டம் நடைபெறும். 9.15 மணி முதல் 10 மணி வரை முதல் பாட வகுப்புகள், பின்னர் 10 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாம் பாட வகுப்புகள் நடைபெறும். இதன் பின்னர் 10.45 மணி முதல் 10.55 மணி வரை இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. 10.55 மணி முதல் 11.40 மணி வரை மூன்றாம் பாட வகுப்பு, 11.40 மணி முதல் மதியம் 12.25 வரை நான்காம் பாட வகுப்புகள் நடைபெறும். தொடர்ந்து 12.25 மணி முதல் 1.30 மணி வரை உணவு இடைவேளை அறிவிக்கப்படும்.
மதியம் 1.30 மணி முதல் 2.10 மணி வரை ஐந்தாம் பாட வகுப்பு நடைபெறும். 2.10 மணி முதல் 2.50 மணி வரை ஆறாம் பாட வகுப்பு நடைபெறும். 2.50 மணி முதல் 3.00 மணி வரை இடைவேளை.
பின்னர் 3 மணி முதல் 3.40 மணி வரை ஏழாம் பாட வகுப்பு, மற்றும் 3.40 மணி முதல் மாலை 4.20 வரை எட்டாவது பாட வகுப்பு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.