IIT Madras: நீர் பாதுகாப்பில் சர்வதேச முதுகலைப் படிப்பு: ஐஐடி சென்னை அறிமுகம்
நீர் பாதுகாப்பில் சர்வதேச முதுகலைப் படிப்பில் சேர எந்தவொரு பொறியியல்/ அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.
![IIT Madras: நீர் பாதுகாப்பில் சர்வதேச முதுகலைப் படிப்பு: ஐஐடி சென்னை அறிமுகம் IIT Madras launches new International Master’s Program on Water Security and Global Change with German Universities IIT Madras: நீர் பாதுகாப்பில் சர்வதேச முதுகலைப் படிப்பு: ஐஐடி சென்னை அறிமுகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/f114246b65c3ca81a7019d4283346bb91678812956245614_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐஐடி சென்னை ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கூட்டு முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளது.
ஜெர்மனைச் சேர்ந்த RWTH Aachen (RWTH), TU Dresden (TUD) ஆகிய இரு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும், AIT, Bangkok, and UNU-FLORES ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடும் ‘நீர்ப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் குறித்த புதிய கூட்டு முதுகலைப் படிப்பை (Joint Mater’s Program -JMP) சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
இந்த பாடத்திட்டம் மூன்று பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் படிப்புகளை கவனிக்கும். மாணவர்கள் ஐஐடி சென்னையில் கல்வியாண்டைத் தொடங்குவார்கள். TUD, RWTH பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டரைத் தொடர்வார்கள். தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வறிக்கையை நெகிழ்வுத்தன்மையுடன் தயாரிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசித் தேதி ஆகும். முதல் தொகுதிக்கான வகுப்புகள் 2024 ஜூலை 29 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://abcd-centre.org/master-program/ என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பாடத்திட்டம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, “நீடித்த வளர்ச்சி இலக்குகளின் குறிக்கோள்களையும் மைல் கற்களையும் எட்டவிருப்பதால், மனிதத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது எந்தவொரு நாட்டிற்காகவும் மட்டுமின்றி உலகளவில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் நோக்கிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
எதற்கு இந்தப் படிப்பு?
மாணவர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை இந்தப் படிப்பு வழங்குவதுடன், உலகளாவிய சுற்றுச்சூழலில் நீர்ப் பாதுகாப்பு சவால்களை சமாளித்தல் மற்றும் காலநிலைப் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்தும் கற்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பொறியியல் பின்னணியைக் கொண்ட இந்திய மற்றும் சர்வதேச மாணவ-மாணவிகள் இந்த முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
நிறுவனங்கள், அரசு முகமைகள், தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் மற்றும் மாஸ்டர் ஆய்வறிக்கை தயாரித்தல் நடைபெறும். இத்திட்டத்தின்மூலம் கூட்டு நிறுவனங்களின் நிபுணத்துவம் ஒருங்கிணைக்கப்படுவதுடன், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்புடையவர்களின் தேவைகளையும் நிறைவேற்ற முடியும். வெளிநாட்டில் படித்தல், சிறப்புத் தேர்வுகளுக்கான விருப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பு இதில் இடம்பெற்றிருக்கும்
இந்த முதுகலை பாடத்திட்டத்தில் ஐஐடிஎம் 5 பாடநெறிகளையும், TUD, RWTH ஆகியவை தலா 6 பாடநெறிகளையும் வழங்கும். இறுதி செமஸ்டரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு முயற்சி அல்லது இணைந்த பல்கலைக்கழகங்களின் ஆலோசனையுடன் முதுகலை ஆய்வறிக்கையை தயாரிக்கலாம்.
சர்வதேச பல்துறை முதுகலைப் பட்டம்
சர்வதேச மாணவர்களுக்கான பல்வேறு பாடத்திட்டங்களை <https://ge.iitm.ac.in/> மூலம் ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது. இதில் வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரத்யேகமாக சர்வதேச பல்துறை முதுகலைப் பாடமும் (I2MP) அடங்கும்.
வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஒன்பது பல்துறை பட்டங்களையும் ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது. எந்தவொரு பொறியியல்/ அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர பல்வேறு துறைகளில் முக்கிய மற்றும் தேர்வு செய்யப்பட்ட படிப்புகளுக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் அடிப்படை ஆராய்ச்சித் திறன்கள் பற்றிய படிப்புகளை சர்வதேச மாணவர்கள் பயில்வார்கள். ஆராய்ச்சி அடிப்படையிலான முதுகலை ஆய்வறிக்கைக்கு இந்தப் பாடத்திட்டத்தின் இரண்டாம் ஆண்டு ஒதுக்கப்படும்.
யாரெல்லாம் படிக்கலாம்?
பொறியியல்/ தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சர்வதேச விண்ணப்பதாரர்கள் I2MP பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பல்துறை முதுகலைப் படிப்பில் ஆர்வமுள்ள உயர்நிலை சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்காக இந்த இரண்டாண்டு பாடத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களை பின்வரும் இணைப்பில் காணலாம். https://ge.iitm.ac.in/I2MP/#popular-programs
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)