ICAI CA Foundation Exam: சிஏ முதல்நிலைத் தேர்வு தேதிகள் மாற்றம்; புதிய தேதிகள் இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
சிஏ முதல்நிலைத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிஏ முதல்நிலைத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
தேர்வு எப்போது?
இந்த நிலையில், டிசம்பர் மாத அமர்வின் தேர்வு தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக டிசம்பர் 24ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31ஆம் தேதி தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31, ஜனவரி 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக முதல்நிலைத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 24, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதல்நிலைத் தேர்வு நடைபெற இருந்தது.
விண்ணப்பிப்பது எப்படி?
முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை https://www.icai.org/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்குக் குறைந்தது 10 நாட்கள் முன்பு, நுழைவுச் சீட்டு வெளியிடப்படும்.
அதே நேரத்தில் சிஏ இடைநிலை, இறுதித் தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை. இவை நவம்பர் 1 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஜூன் அமர்வு தேர்வின் தேர்ச்சி எப்படி?
இதற்கிடையில், 2023-ம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக ஜூன் 24, 26, 28 மற்றும் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 290 தேர்வு மையங்களில் 4 தாள்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
1,03,517 தேர்வர்கள் ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், வெறும் 25,860 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 24.98 சதவீதம் ஆகும். இதில் 47,944 மாணவிகள் தேர்வை எழுதி, 11,412 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 23.8 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைப் பொறுத்தவரை, 55,573 பேர் எழுதி, 14,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 25.99 சதவீதம் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.icai.org/