தொடங்கிய அரையாண்டு விடுமுறை; பள்ளி மாணவர்களே.. இதை கட்டாயம் செய்யாதீங்க- கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்!
விடுமுறை முடிந்து, 05-01-2026 திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது- பள்ளிக் கல்வித்துறை.

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்த்தல், மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் சார்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் (சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற வாரிய பள்ளிகள் தவிர) அரையாண்டு தேர்வு முடிந்து இன்று (24-12-2025 - புதன் கிழமை) முதல் 04-01-2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5 பள்ளிகள் திறப்பு
இந்த விடுமுறை முடிந்து, 05-01-2026 திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்டுள்ளவாறு தெரிவிக்கப்படுகிறது.
என்னென்ன அறிவுறுத்தல்?
- மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, கிணறு, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.
- மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம்.
- விடுமுறை நாட்களில் இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்ற கலை ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்.
- தாத்தா, பாட்டிகளுடன் சேர்ந்து உணவு அருந்தவும் மற்றும் அவர்களுடன் நேரம் செலவழிக்க ஊக்குவிக்கலாம்.
- மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்கலாம்.
- பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.
- மாணவர்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு புத்தகங்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்தலாம்.
எனவே, அனைத்து வகை தனியார் பள்ளிகளின் முதல்வர்களும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்பட்டு உள்ளது.






















