NEET UG 2024 Result: அதிர்ச்சி.. நீட் தேர்வில் 98% மதிப்பெண்; பிளஸ் 2 துணைத் தேர்விலும் ஃபெயிலான மாணவி!
நீட் தேர்வு முடிவுகளில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்றவர், தனது பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள், வேதியியலில் 31 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், துணைத் தேர்விலும் தோல்வி அடைந்த குஜராத் மாணவி, நீட் நுழைவுத் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற சம்பவம், நீட் தேர்வின் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் இளநிலைத் தேர்வு முடிவுகள் ஜூலை 20 அன்று வெளியாகின. இதில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் மதிப்பெண்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு முடிவுகளில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாநிலத்தில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இயற்பியலில் 99.8 பர்சண்டைல், வேதியியலில் 99.1 பர்சண்டைல், உயிரியியல் 99.1 பர்சண்டைல் என ஒட்டுமொத்தமாக 99.9 பர்சண்டைல் மதிப்பெண்களைப் பெற்று இருந்தார். எனினும் திருத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகளுக்குப் பிறகு அவரின் மதிப்பெண்கள் 700 ஆகக் குறைந்தன.
பிளஸ் 2-ல் ஃபெயில்; நீட் தேர்வில் உயர் மதிப்பெண்கள்
அதேநேரத்தில் அவர் தனது பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள், வேதியியலில் 31 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். உயிரியல் பாடத்தில் 39 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 59 மதிப்பெண்களும் பெற்று இருந்தார். தொடர்ந்து குஜராத் மாநில வாரியம் நடத்திய துணைத் தேர்வை எழுதினார். இதில், வேதியியல் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண்களான 33 மதிப்பெண்களை எடுத்து அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். எனினும் இயற்பியல் பாடத்தில் அவரால் 22 மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை
நீட் பர்சண்டைல் மூலம் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் அவருக்கு சேர்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாணவர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் தேர்ச்சி கூட அடையவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட மாணவியால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் நீட் தேர்வின் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்கு ஆளாக்கியுள்ளது.