Green Olympiad 2024: சூழலியல் ஒலிம்பியாட் போட்டிகள்: ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள்- கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
Green Olympiad for Youth 2024: சூழலியல் இளைஞர் ஒலிம்பியாட் போட்டிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சூழலியல் இளைஞர் ஒலிம்பியாட் போட்டிகள் ஏப்.8-ம் தேதி ஆன்லைனில் தொடங்கி நடைபெறுகின்றன. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து யுஜிசியின் செயலர் மணீஷ் ஜோஷி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
இளநிலை பட்டப் படிப்புகளிலும் பிற படிப்புகளிலும் கட்டாயம் சுற்றுச்சூழல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, தீவிரமான சூழலியல் பிரச்சினைகள் குறித்த தேவையான அறிவை மாணவர்கள் பெறும் வகையில், கல்லூரிகளின் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும்.
போட்டி குறித்த விவரங்கள்
இந்த நிலையில், யுஜிசி, மத்தியக் கல்வி அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் தலைமையில், ஆற்றல் மற்றும் வளங்கள் மையம் (TERI) சுற்றுச்சூழல் சார்ந்த இளைஞர்களுக்கான ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 18 முதல் 25 வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்.
ஆன்லைனில் ஏப்ரல் 8 முதல் 12ஆம் தேதி வரை இந்த ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் போட்டி நடைபெர உள்ளது. இதற்கு பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் அனைத்து நபர்களுக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
ரொக்கப் பரிசுகள், உள்ளகப் பயிற்சி
ரேங்க் பெற்றவர்களுக்கு தகுதி மற்றும் தனிச்சிறப்பு மின்னணு சான்றிதழ்கள் (Merit and distinction) வழங்கப்படும். ஒட்டுமொத்த அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
ஆற்றல் மற்றும் வளங்கள் மையம் (TERI) மற்றும் பிற புகழ்பெற்ற நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு மணி நேரத் தேர்வு
இந்த தேர்வானது ஆன்லைனில் வரும் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 60 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 50 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.youtube.com/@UGC_India/featured