Youtube வீடியோ வாயிலாக கணிதப்பாடம்.. டிரெண்டாகும் அரசுப்பள்ளி ஆசிரியர்..
300-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றியுள்ள நிலையில், வரும் நாள்களில் 1150 க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, மாநிலம் முழுவதும் அதிகமான மாணவர்களை சென்றடைய முயற்சிக்கிறார்
கணக்கா..? என பயந்து ஓடும் மாணவர்களும் எளிமையாக புரியும் வகையில் கணிதத்தை யூடியூப் சேனல் வாயிலாக நடத்தி அசத்தி வருகிறார் காளப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன்…
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்ற வார்த்தைகளை நம்மில் பலர் சொல்லாமல் இருந்திருக்கவே மாட்டோம். ஆம் மற்ற பாடங்களை விட கணக்கு பாடம் பயில வேண்டும் என்று நினைத்தாலே மாணவர்கள் அலறிஅடித்து ஓடிவிடுவார்கள். அந்தளவிற்கு மாணவர்களை அச்சுறுத்தும் ஒரு பாடமாகவே உள்ளது கணிதம். வகுப்பறைக்கு சென்றாலே புரியாத கணக்குகள், எப்படி ஆன்லைன் வாயிலாக கற்பிக்க முடியும் என்ற மனநிலையில் பல ஆசிரியர்கள் இருந்த நேரத்தில் தான், தமிழ்நாடு அரசுப்பள்ளியின் கணித ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தனது யூடியூப் சேனல் வாயிலாக எளிய முறையில் கணிதம் கற்றுக்கொடுத்துவருகிறார். இதுவரை 13 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களும் இவரது சேனலுக்கு உள்ளார்களாம். அப்படி என்ன செய்து வருகிறார்? வாங்க இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.
கணக்கு என்றாலே மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுவார்கள். இதற்காக பள்ளி முடிந்தப்பிறகு டியூசன் எல்லாம் செல்வார்கள். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் எங்குமே செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்துவந்தனர். அந்நேரத்தில் தான் கணிதத்தில் முதுகலை படிப்பை முடிந்து காளப்பட்டி அரசுப்பள்ளியில் பணியாற்றும் தமிழ்ச்செல்வன் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தனது சேனலில் கணிதத்தில் அடிக்கடி ஏற்படும் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துவருகிறார். இதுவரை 13 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளதோடு, 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதுக்குறித்து கணித ஆசிரியர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், லாக்டவுன் காலக்கட்டத்தில் ஆன்லைனில் கணித கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்குவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் step by step ஆக கணக்குகளைப்போட்டு வீடியோக்களைப் பதிவேற்றதும் மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்தது. அதிலும் தமிழ் மொழியில் கணிதத்தை சுலபமாக கற்றுக்கொடுப்பதால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது என கூறுகிறார். இந்த சேனலை பார்த்து அனைத்து மாணவர்களும் கணிதத்தை எளிமையாக கற்றுக்கொள்கின்றனர். இது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இதனை தான் செய்யவில்லை எனவும் கூறுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றியுள்ள நிலையில், வரும் நாள்களில் 1150 க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, மாநிலம் முழுவதும் அதிகமான மாணவர்களை சென்றடைய முயற்சி செய்யவுள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் யூடியூப் வீடியோக்கள் அனைத்தும் சுலபமாக அருமையாக இருக்கும் எனவும் தமிழ் மொழியில், கணிதத்தை தமிழ்செல்வன் சார் விரிவாக விளக்குவதால் படிப்பதற்கு எளிமையாக உள்ளது. இதனால் நல்ல மதிப்பெண்களை பெற முடிவதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி கல்வித்துறையின் மூத்த அதிகாரி கே. ஆர் கண்ணன் கூறுகையில், கணிதத்தை தமிழ் மொழியில் விளக்கி, மாணவர்களுக்கு எளிதாக கருத்துகளைப் புரியவைக்கும் தமிழ்செல்வனின் முயற்சி சிறப்பானது மற்றும் பாராட்டுதலுக்குரியது எனவும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.