Temporary Teachers: 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிய அரசு: முழு விவரம் இதோ இங்கே..
தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 2,760 2,760 ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 2,760 2,760 ஆசிரியர்களை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர்த்து, தகுதித் தேர்வில் ஏற்படும் தாமதம், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் காலியிடங்கள், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 1990 முதல் 1991 வரை மற்றும் 2002 -2003 ஆம் ஆண்டு முதல் 2006- 2007ஆம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். குறிபாக 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே 2011 முதல் 2012 வரையிலான கல்வி ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014- 2015 ஆம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
2018- 2019 ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்
அதைத் தொடர்ந்து 2018- 2019 ஆம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இதனால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளில் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இப்பணியிடங்களைப் பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது.
இது தவிர 2018- 2019 ஆம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. மேலும் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அதேபோல் 2018- 2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இவ்வாறு 200 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகின்றன. முன்னதாக 31.12.2021 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 1.01.2022 முதல் 31.12.2022 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தற்காலிக ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.