ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
TN German Language : நேரில்தான் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படும். ஆன்லைனில் பயிற்சி பெற முடியாது. இந்தப் பயிற்சி சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளன.
TN German Language : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஜெர்மன் மொழி இலவசமாகக் கற்பிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (அக்டோபர் 25) கடைசித் தேதி ஆகும்.
வகுப்பு எப்போது?
விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாரத்தில் 5 நாட்கள் என, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நேரில்தான் பயிற்சி வகுப்புகள்
அதேபோல நேரில்தான் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படும். ஆன்லைனில் பயிற்சி பெற முடியாது. இந்தப் பயிற்சி சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளன. தங்குமிட வசதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி பெற்ற பிறகு, ஜெர்மனியில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதற்காக ஜெர்மன் மொழி?
ஜெர்மனி நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்ற சுமார் 17 லட்சம் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக அங்கு செவிலியர் பணிக்கான தேவை அதிகமாக உள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளின் காரணமாக சுமார் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஜெர்மனியில் அடிப்படை ஊதியமே 2600 - 3400 யூரோக்கள் ஆகும், அதாவது இந்திய மதிப்பில் 2.36 லட்சம் முதல் 3.08 லட்சம் ரூபாய் ஆகும். ஜெர்மனியில் செவிலிய உதவியாளர்கள், காப்பாளர்கள் ஆகிய பணிகளுக்குத் தேவை அதிகமாக உள்ளது.
என்ன தகுதி?
பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டுக் குறைந்தபட்சம் ஓராண்டு, ஏதாவது ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்களுக்கு 8 மாத காலம் பி2 பிரொஃபிஷியன்சி எனும் படிப்பு கற்பிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
* காப்பீட்டுடன் வேலை பாதுகாப்பு உறுதி
* தாய், தந்தை இருவருக்குமே மகப்பேறு விடுமுறை
* பதிவு செய்யப்பட்ட செவிலியர் ஆகிவிட்டால், குடும்பத்தினர் ஜெர்மனியில் தங்க அனுமதி
* மருத்துவக் காப்பீடு
* குழந்தைகளுக்கான மாத ஊக்கத் தொகை
* ஜெர்மனியில் பணியாற்றும் அனைவரின் குழந்தைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி
உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdh0CFyN6TJSxedobTTNMmHx-GnU9u04QVWaZluPfEldW4igQ/viewform என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: நான் முதல்வன் இணையதளம் - https://www.naanmudhalvan.tn.gov.in/
முகவரி- Naan Mudhalvan, TNSDC, 8th Floor, CMRL Building, METROS,
No.327, Anna Salai, Nandanam, Chennai - 35
இ மெயில்: support@naanmudhalvan.in
தொலைபேசி எண்கள்: +91 78457 86117, +91 78457 66103