ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
அரசாணை எண் 243ஐ ரத்து செய்யக் கோரி ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டிட்டோஜேக் தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு, முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243ஐ இரத்து செய்யக் கோரி ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான டிட்டோஜேக் தெரிவித்துள்ளது.
''டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமையேற்றார். டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் சார்பிலும் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண்: 1
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90% ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்: 243ஐ இரத்து செய்திட தமிழக அரசை வலியுறுத்தி அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை டிட்டோஜாக் பேரமைப்பு மேற்கொண்டது.
அரசின் உயர் அலுவலர்களும் மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்த நிலையில் தற்போது மேற்படி அரசாணையினை நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தீர்மானம் எண்: 2
தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வுப் பொதுமாறுதலை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் எண்: 3
அறிவிக்கப்பட்டுள்ள பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டுமென பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் எண்: 4
ஆசிரியர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி அரசாணை எண் 234 ஐ நடைமுறைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கலந்தாய்வுப் பொதுமாறுதலை நடத்தும் பட்சத்தில் டிட்டோஜாக் பேரமைப்பு 15.05.2024 அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
28.06.2084 வெள்ளி- மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
29.06.2084 சனிக்கிழமை - ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்.
01.07.2024 திங்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்.
02.07.2024 செவ்வாய் - ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்.
03.07.2024 புதன் - மறியல் போராட்டம் கலந்தாய்வு நடைபெறும் மையங்களின் முன்பு நடைபெறும்.
04.07.2014 வியாழன் - டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட தொடர் போராட்டத்தினை முடிவெடுத்து அறிவித்திடவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் எண்: 5
வேண்டுகோள்: ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்''.
இவ்வாறு டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.






















