Foreign universities: இந்தியாவில் கல்லூரிகளை திறக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்...ஆன்லைன் கோர்சுகளை எடுக்க அனுமதி இல்லை..!
இந்தியாவில் கிளைகளை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் முதற்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை திறக்க அனுமதிப்பதற்கான ஒழுங்குமுறை வரைவை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கிளைகளை திறக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆல்னைல் கோர்சுகளை எடுக்க அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தியாவில் கிளைகளை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் முதற்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நேரடி வகுப்புகளை கொண்ட முழு நேர கோர்சுகளை நடத்தலாம் என்றும் தொலைதூர படிப்புக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தங்களுடைய சொந்த சேர்க்கை முறையை நடத்தவும் கட்டணத்தை வசூலிக்கவும் இந்தப் பல்கலைக்கழகங்கள் சுதந்திரம் பெற்றிருக்கிறது.
இந்திய கிளைகளில் வழங்கப்படும் கல்வியின் தரமானது தங்கள் முக்கிய பல்கலைக்கழத்திற்கு இணையாக வழங்குவதை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
வெளிநாட்டு பல்கலைக்கழங்கள், பெற்று கொள்ள அனுமதிக்கக்கூடிய நிதி உதவி குறித்து பேசிய அவர், "அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு ஏற்ப, வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் நிதி நன்கொடை பெற்று கொள்ளலாம்.
இந்திய சட்டங்களின்படி உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படும். அவர்கள் இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்களின்படி வருடாந்திர அறிக்கைகள் மற்றும் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.
வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானிய குழு இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவி, ஆணையத்தின் இறுதி அனுமதியைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயல்பட வேண்டும்
இறுதி ஆண்டில் (9 ஆண்டு கால செயல்பாட்டிற்குப் பிறகு) கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய செயல்திறன் அறிக்கை சமர்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பிறகு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்." என்றார்.
இந்திய மாணவர்களின் நலனை கருதி, "பல்கலைக்கழக மானிய குழுவின் முன் அனுமதியின்றி வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனகள் எந்தவொரு கோர்சுகளையும் கல்லூரி கிளைகளையும் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
எந்தவொரு கல்வி நிறுவனமும் ஆணையத்தால் வரையப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறினால் அல்லது மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதேபோல, விதிகளை மீறும் பட்சத்தில், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை இடை நிறுத்தம் செய்ய பல்கலைக்கழக மானிய குழுவுக்கு அதிகாரம் உள்ளது" என்றார்.