NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
நீட், ஜேஇஇ (மெயின்), க்யூட், நெட் ஆகிய நுழைவுத் தேர்வுகளோடு சிமேட், ஜிபேட் (JEE (Main), NEET-UG, CMAT, GPAT, UGC- NET) ஆகிய தேர்வுகளையும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவ, பொறியியல், உதவிப் பேராசிரியர் நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி எனப் பற்பல சர்ச்சைகள் சுழற்றி அடிக்கும் நிலையில், இந்தத் தேர்வுகள் அனைத்தையும் நடத்தும் என்டிஏவில் என்னதான் நடக்கிறது? விரிவாகக் காணலாம்.
பொது நுழைவுத் தேர்வு:
நாடு முழுவதும் தொழில்நுட்பப் படிப்புகள் அனைத்துக்கும் நுழைவுத் தேர்வுகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வும் பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகின்றன. கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியப் பணிகளில் சேர நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
நீட், ஜேஇஇ (மெயின்), க்யூட், நெட் ஆகிய நுழைவுத் தேர்வுகளோடு சிமேட், ஜிபேட் (JEE (Main), NEET-UG, CMAT, GPAT, UGC- NET) ஆகிய தேர்வுகளையும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி வருகிறது.
அதென்ன தேசியத் தேர்வுகள் முகமை?
2017ஆம் ஆண்டு தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட முகமையே என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை National Testing Agency (NTA) ஆகும். இந்திய சங்கங்களின் பதிவுச் சட்டம், 1860-ன்கீழ் இந்த முகமை உருவாக்கப்பட்டது.
மத்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் என்டிஏ செயல்பட்டு வருகிறது. இதில், கல்வியாளர்கள், வல்லுநர்கள், ஆய்வாளர்கள், கல்வி நிர்வாகத்தினர் இயங்கி வருகின்றனர். மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், மாநிலக் கல்வி வாரியங்கள், யுஜிசி, சிபிஎஸ்இ, சிஐஸ்சிஇ, என்சிடிஇ, என்ஐஓஎஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் என்டிஏ இணைந்து பணியாற்றி வருகிறது.
என்டிஏ செயல்பாடுகள் என்ன?
நுழைவுத் தேர்வுகளை வெளிப்படையான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதே என்டிஏவின் முக்கிய செயல்பாடு ஆகும். இந்தத் தேர்வுகள் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்லூரி சேர்க்கையோ, உதவித்தொகை பெறப்படுவதோ உறுதி செய்யப்படுகிறது.
ஆனால் என்டிஏ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. முன்னதாக 2015ஆம் ஆண்டு All India Pre-Medical Test (AIPMT) எனப்படும் அகில இந்திய மருத்துவத்துக்கு முந்தைய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. அப்போது இந்தத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
ஆண்டுதோறும் மோசடிகள், கைதுகள்
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2020ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேரும் 2021ஆம் ஆண்டு தேர்வில் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே 2021ஆம் ஆண்டு டிசிஎஸ் மென்பொருள் நிறுவனம் தயாரித்து வழங்கிய மென்பொருள் மூலம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வில், ஹேக்கிங் செய்யப்பட்டது அதிர்வலைகலை ஏற்படுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் ஷார்ஜின் என்ற வெளிநாட்டவர் இந்த ஹேக்கிங் மோசடியை நிகழ்த்தினார். இதன்மூலம் மாணவர்களுக்கு பதில் ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் கணினி முன்பு அமர்ந்து தேர்வு எழுதினர்.
ஹரியாணாவின் சோனெபத் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து இந்த மோசடி நிகழ்ந்தது. இந்த முறைகேட்டில் ஏராளமான வெளிநாட்டவர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றியதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் நடந்த கொடூரம்
இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த சம்பவம் நிர்வாகச் சீர்கேட்டின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டியதோடு, அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நீட் நுழைவுத் தேர்வின்போது சில மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன விவகாரம் சர்ச்சையானது. இது நாடு முழுக்கப் பேசுபொருளாக மாறிய நிலையில், மேல் உள்ளாடையைக் கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்திய 3 பேர் உட்பட 5 பெண்களைக் காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து பதிலளித்த என்டிஏ, இத்தகைய நடவடிக்கைகளை நீட் உடைக் கட்டுப்பாடு அனுமதிக்கவில்லை என்று கூறியது.
ஜேஇஇ மெயின் தேர்விலும் முறைகேடு
2022ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சிபிஐ 8 பேரை விசாரித்தது. 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வில் 39 தேர்வுகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, தேர்வெழுதத் தடை செய்யப்பட்டனர். முன்னதாக ஜேஇஇ மெயின் 2ஆவது அமர்வின் முதல் நாளிலேயே ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதும் மோசடி செய்ததாகவும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2024ஆம் ஆண்டு நீட் இளநிலைத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம், தாள் கசிவு, மோசடி, முறைகேடுகள் கண்டறியப்பட்டன. 24 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் 1,563 பேருக்கு மட்டும் என்டிஏ கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
யுஜிசி நெட் தேர்வு ரத்து, சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு
இதற்கிடையே நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு யுஜிசி நெட் தேர்வு ஜூன் அமர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல 2024 சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக முதுகலை நீட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் சர்ச்சையானதை அடுத்து, தேசியத் தேர்வுகள் முகமை தலைவர் சுபோத் குமார் சிங் அண்மையில் நீக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலா, என்டிஏ இயக்குநர் ஜெனரல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனியாவது என்டிஏவில் மோசடியும் முறைகேடுகளும் குறைந்து, மாணவர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.