EXCLUSIVE: கைகள் போனால் என்ன? கல்வி இருக்கே... 10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த க்ரித்தி வர்மாவின் நம்பிக்'கை' கதை!
குடும்பத்தில் இருந்து தந்தை பிரிந்து வாழும் நிலையில் தனியொருத்தியாக வளர்த்து, தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டுள்ளார் தாய் கஸ்தூரி.
தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இரு கைகளையும் விபத்தில் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா, 437 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் க்ரித்தி வர்மா படித்து வருகிறார்.
குடும்பத்தில் இருந்து தந்தை பிரிந்து வாழும் நிலையில் தனியொருத்தியாக வளர்த்து, தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டுள்ளார் தாய் கஸ்தூரி.
தனது பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் ABP Nadu- செய்தி தளத்திடம் பேசினார் கஸ்தூரி.
’’கணவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. இதனால் திருமணம் ஆனதில் இருந்தே குடும்பப் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் மின்சாரக் கசிவு ஏற்பட்டதில், மகனுக்கு ஷாக் அடித்தது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு க்ரித்தி வர்மா அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது அவனுக்கு நான்கரை வயது.
கைகளை எடுத்தால்தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவமனையில் தெரிவித்தனர். உடனே பெங்களூருவுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தோம். சில் நாட்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட்டு, அவன்கைகளில் இருந்து நீர் வடியத் தொடங்கியது. ஃபிட்ஸ் வர ஆரம்பித்தது. உடனே, கைகளை எடுத்தால்தான் மகன் உயிர் பிழைப்பான் என்றனர். ஆனால் கணவரோ, ’கை இல்லாத குழந்தை எனக்கு வேண்டாம். மருத்துவமனையிலேயே எதாவது செய்துவிடுங்கள்’ என்று சொன்னார். மகனின் உடல்நிலை மீது பழி சுமத்தி, மது அருந்திக்கொண்டே இருந்தார்.
நான் அழுதுகொண்டே இருந்தேன். அங்கிருந்த மருத்துவர்தான் என்னைத் தேற்றினார். நீங்கள் தைரியமாக இருந்தால்தான் மகனைப் பார்த்துக்கொள்ள முடியும் என்றார். மனதைத் தேற்றிக்கொண்டு, ’கையே போனாலும் என் குழந்தை எனக்கு வேண்டும்’ என்று கேட்டேன். முழங்கைக் கீழே வரை வெட்டி எடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் 2 மாதங்கள் இருந்தோம். என் மகனும் நானும் மீண்டும் மறுபிறவி எடுத்தோம்’’ என்று கண்ணீர்க் கதை சொல்கிறார் கஸ்தூரி.
கைகளை இழந்த மகனை வைத்து, எப்படி பராமரித்தீர்கள்? அவரை பள்ளிக்கு அனுப்பியது எப்படி என்று கேட்டேன்.
’’சிகிச்சைக்குப் பிறகு கிருஷ்ணகிரியில் உள்ள அம்மாவின் வீட்டுக்குத் திரும்பினோம். சில காலம் வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொண்டேன். சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கார்மண்ட் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். தூசு ஒவ்வாமை காரணமாக உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. பையனுக்கு பிஸ்கட் கூட வாங்கிக் கொடுக்க முடியாத அளவு கஷ்டப்பட்டேன்.
கல்வி ஒன்றுதான் ஆயுதம் என்று உணர்ந்து மகனை அருகில் இருந்த ஜீலூர் அரசுப் பள்ளியில் சேர்த்தேன். வீட்டு சூழல் புரிந்து அவனும் தானாகவே சாப்பிட, எழுதக் கற்றுக்கொண்டான். ஓவியமும் வரைவான். ஆசிரியை ஆனந்தி அவனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். கொரோனா காலத்தில் வேலை போய்விட்டது. ஏரி வேலைக்குப் போனேன். இப்போது மீண்டும் கார்மெண்ட்ஸ் வேலைக்குச் செல்கிறேன். 5ஆம் வகுப்புக்குப் பிறகு மேல்மருதி அரசுப் பள்ளியில் க்ரித்தியைச் சேர்த்தேன்’’ என்கிறார் சாதனைத் தாய் கஸ்தூரி.
கைகளை இழந்த க்ரித்தி வர்மா அன்றாட செயல்பாடுகள் எப்படி என்று கேட்டதற்கு, பெருமிதம் பொங்கப் பேசுகிறார் கஸ்தூரி.
’’ஸ்கூலுக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாவற்றையும் பேகில் வச்சுக் கொடுத்துடுவேன். அவனாகவே எல்லாவற்றையும் எடுத்துப்பான். டிசர்ட்லாம் அவனே போட்டுப்பான். எலாஸ்டிக் வைச்ச பேன்ட் தைச்சி குடுத்துருக்கேன். அவனாவே எக்ஸாம்லாம் எழுதிடுவான். ஆனா அரையாண்டுத் தேர்வுல 3 மணி நேரம் எக்ஸாம் எழுதி, கை வீங்கிடுச்சு. அதனால் பப்ளிக் எக்ஸாம்ல, க்ரித்திக்கு உதவியாளர் வந்து தேர்வை எழுதினாங்க. இப்போ 437 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதல் ஆளா மார்க் வாங்கிருக்கான்’’ என்கிறார் கஸ்தூரி.
40 வயதான நீங்கள், வேறு திருமணம் குறித்து யோசிக்கவில்லையா? என்று கேட்டதற்கு சிரிக்கிறார்.
’’கல்யாணமா? நீங்க வேற மேடம். என் வாழ்க்கைல எப்பயும் என் மகன் மட்டும்தான். அவன்தான் எல்லாமே. இதுவரை எனக்கு அந்த எண்ணமே வரலை. இனியும் வராது.
முதலமைச்சர் க்ரித்திக்கு கைகள் பொருத்த உதவறதா சொல்லிருக்கார். அவன் படிச்சு, பெரிய அதிகாரியாகி சாதிக்கணும். என் மகன் இந்த பூமில இருக்கணுமான்னு கேட்டவங்க மத்தில, அவன் தலைநிமிர்ந்து வாழணும். அதுவே எனக்குப் போதும்’’ என்று விடைகொடுக்கிறார்.
மாணவ சமுதாயத்துக்கு நம்பிக்கை ஒளியாய் மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்!