Engineering vs Arts: பொறியியல் படிப்புகளில் குறையும் ஆர்வம்; கலை, அறிவியலில் குவியும் மாணவர்கள்- என்ன காரணம்?
கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி 12 நாட்களிலேயே 3.25 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?
கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி 12 நாட்களிலேயே 3.25 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?
தமிழக அரசின் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் அண்மைக் காலமாக ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 22-ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. மாணவர்கள் https://tngasa.org/, https://tngasa.in/ என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் - ரூ.2 என ரூ.50 செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்த நிலையில், ஜூலை 3ஆம் தேதி மாலை வரை 3,25,904 பேர் கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். 2,66,961 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். 2,35,801 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதாவது 12 நாட்களில், 3.26 லட்சம் பேர் கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
பொறியியலுக்குக் குறைந்த மவுசு
இதற்கிடையே பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 20-ம் தேதி முதல் இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர, https://tneaonline.org இணையதளத்தில் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.
கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 110 மையங்களாக உயர்த்தப்பட்டது. எனினும் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர ஜூலை 3ஆம் தேதி மாலை 6 மணி வரை 1,32,253 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். 86,565 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 54,833 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
2 வாரத்தில் 1.5 லட்சத்தைத் தாண்டாத மாணவர்கள் எண்ணிக்கை
விண்ணப்பப் பதிவு தொடங்கி 14 நாட்கள் ஆகியும், 1.5 லட்சம் மாணவர்கள் கூட விண்ணப்பிக்காத நிலையில், பொறியியல் மீதான ஆர்வம் குறைந்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்துக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ABP நாடுவிடம் கூறும்போது, ''12 நாட்களில், 3.26 லட்சம் மாணவர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் குறைந்துள்ளது. இதற்கு கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் மத்தியில், அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது என்ற காரணத்தை மட்டுமே கைகாட்ட முடியாது.
பொருளாதார பாதிப்பு முக்கியக் காரணம்
கொரோனா காரணமாகப் பொது மக்களிடையே ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் இதற்கு முக்கியக் காரணம். அதனால் குறைவான கட்டணத்தில், பட்டப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்களும் மாணவர்களும் நினைக்கிறார்கள். கட்டண விகிதம் காரணமாக, அதிக அளவிலான மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளையே தேர்ந்தெடுப்பர்'' என்று ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
எனினும் தனியார் கல்லூரிகளின் திறன் போதாமையையும் வேலைவாய்ப்பின்மையும் காரணமாகக் குறிப்பிடுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இதுகுறித்துப் பேசும் அவர், ''கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் போக்கு நீடித்து வருகிறது. பொறியியல் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் திறன் போதாமையுடன் இருக்கும் தனியார் கல்லூரிகள் முக்கியக் காரணம்.
திறன் போதாமை, வேலைவாய்ப்பின்மை
தனியார் கல்லூரிகளால் பொறியியல் கல்லூரிகளுக்குத் தேவைப்படும் கட்டமைப்பை முழுமையாக வழங்க முடிவதில்லை. தலைசிறந்த கற்பித்தலை அளிக்க முடிவதில்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. பட்டப் படிப்பை முடித்தாலும் வேலை செய்வதற்கான திறன் போதிய அளவில் இல்லாததால், வேலை கிடைப்பதில்லை. பாடப்புத்தகத்தைத் தாண்டி வேறு எதையும் அவர்களால் யோசிக்க முடிவதில்லை. இதனால் பொறியியல் முடித்து வேலை கிடைக்காதவர்கள், படிப்பையே முடிக்க முடியாதவர்கள் என்று தனியாக ஓர் இனமே உருவாகி வருகிறது.
இரண்டாவதாக, அறிவியல் மற்றும் வணிகப் படிப்பை முடித்தவர்களுக்கு என்றுமே தேவை இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். எந்தத் துறையிலும் அவர்களால் வேலை செய்ய முடியும் என்னும் நிலை, அவர்களை கலை, அறிவியல் படிப்புகளை நோக்கி ஈர்க்கிறது'' என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.
விண்ணப்பப் பதிவு அதிகரிக்கும்
பொறியியல் விண்ணப்பப் பதிவுகள் மெல்ல மெல்ல அதிகரிக்கும் என்கிறார் உயர் கல்வி ஆலோசகர் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறும்போது, ''சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்தியக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அவை வெளியானவுடன் பொறியியல் விண்ணப்பப் பதிவு அதிகரிக்கும். அதேபோல விண்ணப்பப் பதிவுக்குக் கடைசி சில நாட்களுக்கு முன்னர், அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பிப்பர். எனினும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவது உண்மைதான்'' என்று தெரிவித்தார்.