மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அளிக்கும் டிப்ளோமா படிப்பு... மிஸ் பண்ணிடாதீங்க
இந்த டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், ncert.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசகராக மாற வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்போ NCERT-யின் இந்த டிப்ளமோ படிப்பை மிஸ் பண்ணாதீங்க. என்ன ரெடியாயிட்டீங்களா?
diploma course NCERT வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (DCGC) டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆசிரியர்கள் நவம்பர் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2026ம் கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (Guidance and Counselling) டிப்ளமோ படிப்புக்கு (DCGC) விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மனநலம் மற்றும் தொழில் வழிகாட்டுதலின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளின் தொழில் திறன்களை மேம்படுத்துவதை இந்த படிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், ncert.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 5 ஆகும். இந்த படிப்பு தொலைதூரக் கல்வி மற்றும் நேரடி வகுப்புகள் என இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த டிப்ளமோ படிப்பு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். ஜனவரி முதல் ஜூன் 2026 வரை ஆறு மாத தொலைதூரக் கல்வி, அதைத் தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் 2026 வரை மூன்று மாத நேரடி வகுப்புகள் மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் 2026 வரை மூன்று மாத பயிற்சி (Internship) ஆகியவை இதில் அடங்கும். மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து வருபவர்களுக்கு ரூ.19,500, மாநில/யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ரூ.6,000, தனியார் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் வழிகாட்டல் பணியாளர்கள் ஆகியோர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். உளவியல், கல்வி, சமூகப் பணி, குழந்தைகள் மேம்பாடு அல்லது சிறப்புக்கல்வி ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், ஒரு வருட கற்பித்தல் அனுபவம் அல்லது அது சார்ந்த அனுபவம் உள்ளவர்களுக்குச் சலுகை உண்டு. குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50% இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.





















