சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்
இதற்கிடையே, நாடு நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்
நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம், " சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும். 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.92 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 55,411-ஆக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி“ நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களை வற்புறுத்தி தேர்வெழுதவைப்பது சிபிஎஸ்இ வாரியத்தின் பொறுப்பற்ற செயலை குறிக்கிறது. சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும், அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, நாடு நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சிவசேனா கட்சியின் செய்தி்த்தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் நேற்று கடிதம் எழுதியுள்ளார் .
தமிழகத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மே 3-ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.