Coaching Centres: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதியில்லை; பொய் வாக்குறுதி கூடாது- பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு செக்!
Coaching Centres New Guidelines: தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக்கூடாது..
16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது. அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, பயிற்சி மையங்களுக்கு அரசு விதித்துள்ளது.
இதுகுறித்து அரசு தெரிவித்து உள்ளதாவது:
16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.
என்ன காரணம்?
பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தற்கொலை, தீ விபத்துகள், வசதிக் குறைபாடு, மாணவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததை அடுத்து, பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் பறந்தன. இதை அடுத்து பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
என்னென்ன விதிமுறைகள்?
* பயிற்சி மைய ஆசிரியர்கள் பட்டப் படிப்பைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் தகுதி, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
* தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.
* பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றில் மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.
* பயிற்சி மைய வளாகங்களில் மாணவர்களுக்கு போதிய இட வசதி அளிக்க வேண்டும்.
* 16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
* மன அழுத்தத்தைத் தவிர்க்க இணைச் செயல்பாடுகள் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.
* அதேபோல மாணவர்களின் மன நலனைப் பேண உயர் கல்வி வழிகாட்டல், உளவியல் பயிற்சிகள் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும்.
* இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பயிற்சி மையங்களின் அங்கீகார அனுமதி ரத்து செய்யப்படும்.
அபராதம் என்ன?
* மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
* முதல் முறை செய்யும் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
* இரண்டாவது முறை இழைக்கப்படும் குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
* அடுத்தடுத்த முறை விதிமீறல்கள் இழைக்கப்பட்டால், பயிற்சி மையங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு மத்திய அரசு பயிற்சி மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து முழுமையாக அறிய: https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/Guideliens_Coaching_Centres_en.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதையும் வாசிக்கலாம்: ASER 2023: தாய்மொழியிலேயே திணறும் மாணவர்கள்; கணக்கிலும் மோசம்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!