CM Breakfast Scheme: 'என்ன தம்பி.. ஸ்டைலுக்கு வாட்ச் கட்டிருக்கியா?' அரசுப்பள்ளி மாணவரைக் கலாய்த்துத் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!
சிறுவனிடம், ’’நல்லா சாப்பிட்டீங்களா? வாட்ச் சும்மா ஸ்டைலுக்கு கட்டி இருக்கிறாயா’’ என்று கேள்வி எழுப்பினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (ஆக.25) விரிவாக்கம் செய்யப்பட்டது. காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில்,இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 114,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், 28.02.2023 முதல் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியின் படி 1,005 நகர்ப்புற மையங்களில் 112,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
* மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கூடம் வர வேண்டும்,
* ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடாது,
* ரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்க வேண்டும்,
* மாணவர்களின் வருகைப்ப திவு அதிகரிக்க வேண்டும்,
* வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் ஆகியவை காலை உணவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
திட்டம் செயல்படுத்தும் முறை
பெருநகர சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சி மற்றும் மலைப் பகுதி மையங்களில் இத்திட்டம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி / சுய உதவிக் குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்டுபறும் வகையில் ரூ.404.41 கோடி செலவில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உணவு பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடியவாறே உணவருந்தினார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த மாணவனிடம் விளையாட்டாய் பேச ஆரம்பித்தார்.
சிறுவனிடம், ’’நல்லா சாப்பிட்டீங்களா? வாட்ச் சும்மா ஸ்டைலுக்கு கட்டி இருக்கிறாயா’’ என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, ’’தம்பி... உனக்கு டைம் பார்க்கத் தெரியுமா? படம் பார்ப்பாயா, வாட்ச் ஓடவில்லையே?’’ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தன்னுடைய ஸ்மார்ட் கடிகாரத்தைக் காண்பித்தவர், ’’இதில் மணி பார்க்கத் தெரிகிறதா? என் வாட்ச்சைப் பாரேன். இப்போது மணி என்ன?’’ என்று கேள்வி எழுப்பினார்.
சிறுவன், ’’இந்த வாட்ச்சுல எனக்கு டைம் பார்க்கத் தெரியாதே?’’ என்று இழுக்க, சிரித்தவாறே தட்டிக் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.