சேலத்தில் 179 மையங்களில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு - ஆர்வத்துடன் எழுதும் மாணவர்கள்
சேலம் மாநகர பகுதியில் உள்ள கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 22,599 மாணவர்களும், 21,965 மாணவிகளும் எனக்கு மொத்தம் 44,564 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வை சந்திக்கவுள்ளார் பள்ளி மாணவர்களுக்காக 179 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில் உள்ள 179 மையங்களில் 70 வினைத்தாள் கட்டுப்பாட்டுவாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள், 344 முதன்மை கண்காணிப்பாளர்கள், 344 துணை அலுவலர்கள், 5,859 அறை கண்காணிப்பாளர்கள், 844 சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் தேர்வு கட்டுப்பாட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தேர்வில் ஆள் மாராட்டம், பார்த்து எழுத முயற்சி செய்தல், துண்டு பேப்பரை வைத்திருத்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீடு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சேலம் மாநகர பகுதியில் உள்ள கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் தேர்வு நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், "மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.