அப்போதே ஜெயலலிதா செய்த காரியம்... புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதற்காக ஜெயலலிதாவை மனதாரப் பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ.சாமிநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா விழாவில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான செளமியா மேற்கொண்டார்.
இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம்
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,229 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி, விழாவில் பேசினார். அவர் கூறும்போது, ’’ இசைக் கலையை சிறப்பாக வளர்த்து வரும் பல்கலைக் கழகமாக
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம்
அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம்தான்.
முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியில் மட்டுமே செயல்படும் பல்கலைக்கழகம் இது. இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சரே வேந்தராக இருக்கிறார்.
முதலமைச்சரே வேந்தராக இருந்தால்தான்...
முதலமைச்சரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறக்கும். பல்கலைக்கழகங்கள் வளர முடியும். இதைக் கருத்தில்கொண்டுதான் 2013-ம் ஆண்டே, முதலமைச்சர்தான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்று, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்தார். இதற்காக அவரை மனதாரப் பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய முதலமைச்சரான நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இது போன்ற முடிவுகளை எடுக்கமுடிகிறது. அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை
அதற்காக சட்ட முன்வடிவுகளையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றது. நல்ல செய்தி வரும். வரும் என்று எதிர்பார்ப்போம். வரவேண்டும் என்று எதிர்போர்ப்போம்’’ என்று டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவை, அதன் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினே பாராட்டி உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.