’மாநில அரசின் சம்மதத்தோடுதான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது’ - மத்திய அரசு விளக்கம்
கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றும் 1976ம் ஆண்டு சட்டத்திருத்தம் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலுடனேயே நிறைவேற்றப்பட்டது -மத்திய அரசு
மாநில சட்டமன்றங்கள் அங்கீகரித்த பின்னரே கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ‘கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றும் 1976ம் ஆண்டு சட்டத்திருத்தம் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலுடனேயே நிறைவேற்றப்பட்டது என்றும் இதனால் கூட்டாட்சி அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை ஏனெனில் கல்வி ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை அது பொதுப்பட்டியலில்தான் உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் இன்றுகாலை மத்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1976 பிரிவு 57 குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தப் பிரிவின் கீழ்தான் மத்திய மற்றும் மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே சட்டமியற்றும் வகையில் கல்வித்துறை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தம் கூட்டாட்சித்தத்துவத்துக்கு எதிராக இருப்பதாகவும் கூட்டாட்சித்தத்துவம்தான் அரசியல் அமைப்புக்கு அடிப்படையானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு இதுதொடர்பான விளக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
’உறுப்பை ஒருபட்டியலில் இருந்து மற்றொரு பட்டியலுக்கு மாற்றுவது மத்திய அரசால் தன்னிச்சையாகச் செய்ய முடியாது என்றும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்றும்’ அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் அளித்த விளக்கத்தை அடுத்து நீதிமன்ற அமர்வு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தொடர்ந்திருந்த வழக்கில்தான் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எழிலன் எம்.எல்.ஏ, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்பர் அலி மற்றும் சி.டி.செல்வம், தி இந்துவின் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறம் செய்ய விரும்பு என்னும் அமைப்பின் கீழ் இந்த வழக்கைத் தொடர முடிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து எழிலன் நாகநாதன் அளித்த விளக்கத்தில் ’இந்தியா மாகாணங்களாக இருந்த காலத்திலேயே கல்வி மாகாணங்களின் பட்டியலில்தான் இருந்தது. இந்திய அரசியல் சட்ட்டம் 1935 அதற்கு உதாரணம். சுதந்திரத்துக்குப் பிறகும் கூட கல்வியை மாநிலப்பட்டியலில் வைப்பதுதான் நல்லது என அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்தவர்களும் நம்பினார்கள்’
மேலும், ‘அரசியலமைப்பு மன்றமே கூட கல்வியை மாநிலப்பட்டியலில் வைப்பதற்குதான் தொடர்ந்து போராடியது. மராத்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்வதே கூறுகையில் கூட கல்வி வாய்ப்பு போதாமையில் இருக்கும் மாகாணங்களில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படாமல் இருப்பதே நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்’ எனவும் தனது கருத்தில் பதிவு செய்திருந்தார்.