பொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பயில மத்திய அரசு அனுமதி : அன்றே வித்திட்டார் கருணாநிதி
பொறியியல் படிப்புகளை தமிழில் பயில மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டும், மாணவர்களின் மத்தியில் வரவேற்பில்லாமல் போனது ஏன்?
பொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பயில அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ள நிலையில் இத்திட்டத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்தியில் பொறியியல் கல்வியை எளிதில் கொண்டு செல்வதற்காக மாநில மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில், இந்த மாநில மொழிகளில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வரும் ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் பயில உள்ளனர். மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கற்பதன் மூலம் பொறியியலின் அடிப்படை அம்சங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்பது ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே-வின் கருத்தாக உள்ள நிலையில், தற்போது 7 மொழிகளில் வழங்கப்பட உள்ள பொறியியல் பாடங்களை மேலும் 11 மொழிகளில் கொண்டு வரவும் ஏஐசிடிஇ திட்டமிட்டு அதற்கான மொழி பெயர்ப்பு மென்பொருளையும் உருவாக்கி உள்ளது.
மாநில மொழிகளில் பொறியியல் கல்வி பயிலும் அறிவிப்பு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் புதிதாக இருக்கலாமே தவிர தமிழகத்திற்கு இது புதிதில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 11 கல்லூரிகளில் தமிழ் மொழியில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பயில்வதற்கான பாடத்திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்தது மட்டுமில்லாமல் தமிழ் மொழியில் பொறியியல் முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீட்டையும் வழங்கியது. தமிழ்வழியில் படித்த மாணவர்கள் தற்போது தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் மூலம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக தமிழ் வழியில் பொறியியல் பயிலும் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்கப்பட்ட நிலையில் தமிழ் வழியில் பொறியியல் பயிலும் ஆர்வம் இல்லாதது இத்திட்டத்திற்கான பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு இருக்காது என கூறப்பட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தாலும், இத்திட்டம் வரவேற்பு பெறாமல் போனதற்கு மேலும் சில முக்கிய காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மொழிபெயர்ப்பாளருமான பூ.கோ.சரவணனிடம் கேட்டபோது,
”பொறியியல் பாடங்களை பயில்வதற்கான குறிப்பிட்ட சில புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் படித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது, மேலும் பொறியியல் துறைசார்ந்த புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்யும் அனுபவம் அப்போது பேராசியர்களுக்கு புதிதாக இருந்தது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த விரிவுரையாளர்கள் மற்றும் பேராசியர்கள் அனைவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்களை நடத்தி வந்த நிலையில் அப்பாடங்களை தமிழில் விளக்க பேராசியர்கள் சிரமப்பட்டனர். முன்னாள் மாணவர்கள். காலப்போக்கில் இந்த சிரமத்தை தவிர்க்க தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும் தேர்வெழுதலாம் என்ற அறிவிப்பு தமிழ் வழியில் பயில விரும்பும் மாணவர்களை மீண்டும் ஆங்கில வழிக்கல்வியை நோக்கி நகர செய்ததாக” கூறினார்.
ரஷ்யா, ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பொறியியல் கல்வியை தங்களது தாய்மொழியில் பயின்று உலக அளவில் பொறியியல் துறை முன்னோடிகளாக விளங்கி வரும் நிலையில் தாய் மொழிகளில் பொறியல் கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்களை தொடங்கி உள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் அமலாக்கப்பட்டுள்ளதையும் அரசு வேலைவாய்ப்பு உறுதி இருந்தும் மாணவர்கள் அதனை பயில தயக்கம் காட்டியதையும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒரு பாடமாக கருத்தில் கொள்வது அவசியம். தாய்மொழிக்கல்வியை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் தமிழகம் எப்போதும் முன்னோடியாக விளங்கி வரும் நிலையில், இதில் ஏற்பட்டுள்ள தடைகளை மத்திய அரசு புரிந்து கொண்டு அதனை களையும் பட்சத்தில் தாய் மொழிக்கல்வி மூலம் தரமான பொறியியல் பட்டதாரிகளை நிச்சயம் இந்தியாவில் உருவாக்கமுடியும் என்று கல்வியாளர்களை தெரிவிக்கின்றனர்