CBSE Syllabus: 2025 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய மாற்றங்கள்; சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு- என்னென்ன தெரியுமா?
வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக பாடத்திட்டம் 15 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட உள்ளது. இந்தூரில் நடைபெற்ற, ’இடைவெளியைக் குறைக்கும்’ பள்ளி முதல்வர்களுக்கான மாநாட்டில் சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் இதை அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?
இதன்படி அனைத்து பாடங்களிலும் 15 சதவீத அளவுக்குப் பாடத்திட்டம் அளவுக்குக் குறைக்கப்படுள்ளது. வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முறையிலும் மாற்றம்
இறுதித் தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்களுக்கு, 60 சதவீத மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டும் மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைய உள்ளன. இதில், புராஜெக்டுகள், அசைன்மெண்ட்டுகள் மற்றும் குறிப்பிட்ட கால சோதனைகள் ஆகியவை அக மதிப்பீடுகளாக இருக்கும். இது மாணவர் திறன்களை மதிப்பிடுவதில் மிகவும் விரிவானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விடைத் தாள்களுக்கு டிஜிட்டல் மதிப்பீடு அறிமுகம்
அதேபோல விடைத் தாள்களுக்கு டிஜிட்டல் மதிப்பீடு முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மதிப்பீடு செய்வதன் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு திறந்த பாடப் புத்தக முறையும் கொண்டு வரப்பட உள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் மனப்பாடம் செய்வதை சோதிப்பதற்கு பதிலாக விமர்சன சிந்தனை மற்றும் பயன்பாட்டுத் திறன்களை சோதிப்பதாகும்.
எத்தனை முறை பொதுத் தேர்வு?
2025ஆம் ஆண்டு ஒரே ஒரு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், 2026-ல் இரு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.