CBSE Board Exam: இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்… மாணவர்களே வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ளுங்கள்!
10 ஆம் வகுப்புத் தேர்வுகள் 16 நாட்களுக்கு நடத்தப்பட்டு மார்ச் 21 லும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் 36 நாட்களுக்கு நடத்தப்பட்டு ஏப்ரல் 05 அன்றும் முடிவடையும்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு போதுத்தேர்வுகள் இன்று (பிப்.15) துவங்குகிறது. தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் முக்கியமான தேர்வு நாள் வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ தேர்வுகள்
சிபிஎஸ்இ வாரியத் தேர்வு அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் தேதிகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 05, 2023 வரை நடத்தப்படுகிறது. இவ்வருட சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு சுமார் 38,83,710 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 7250க்கும் மேற்பட்ட மையங்களிலும், வெளிநாடுகளில் 26 மையங்களிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒட்டுமொத்தமாக 16 நாட்களுக்கு நடத்தப்பட்டு மார்ச் 21, 2023க்குள் முடிவடையும். அதேசமயம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் 36 நாட்களுக்கு நடத்தப்படும், அதன்படி இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 05, 2023 அன்று முடிவடையும்.
10 ஆம் வகுப்பில் எத்தனை பேர்
பத்தாம் வகுப்பில், சிபிஎஸ்இ 76 பாடங்களிலும், 12ஆம் வகுப்பில் 115 பாடங்களிலும் தேர்வுகளை நடத்தும். இவற்றில் அவரவர் தேர்வு செய்து படித்த பாடங்களை மாணவர்கள் எழுதுவார்கள். இதன் மூலம் CBSE ஆல் நடத்தப்படும் பாடங்களுக்கான தேர்வு மொத்தம் 191 ஆக இருக்கும். 10ம் வகுப்பிற்கு மொத்தம் 21,86,940 பேர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர், அவர்களில் 9,36,566 பெண்கள் மற்றும் 12,47,364 பேர் ஆண்கள். 7,240 மையங்களில் 24,491 பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்படும்.
12 ஆம் வகுப்பில் எத்தனை பேர்
12 ஆம் வகுப்பிற்கு, மொத்தம் 16,96,770 மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர், அவர்களில் 7,45,433 பெண்கள் மற்றும் 9,51,332 ஆண்கள். "இந்தியாவிலும், வெளிநாடுகளில் உள்ள 26 மையங்களிலும் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் தேர்வுக்குத் தயாராகும் நோக்கத்திற்காக மாணவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும் வகையில் சிபிஎஸ்இ கால அட்டவணையை நிர்ணயித்துள்ளது. ," என்று சிபிஎஸ்இ அறிக்கை கூறுகிறது.
தேர்வு நாள் வழிமுறைகள்
- கடைசி நேர இடையூறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையுங்கள். அதிகாரப்பூர்வ அறிக்கை நேரம் 9:30 AM.
- காலை 10:00 மணிக்குப் பிறகு தேர்வுக்கூட நுழைவு வாயில்கள் மூடப்படும் என்பதால் தேர்வர்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மாணவர்கள் தங்களின் பள்ளி அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையுடன் முறையாக கையொப்பமிடப்பட்ட CBSE அனுமதி அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
- தேர்வு காலை 10:30 மணிக்குத் தொடங்கி, பாடத்தைப் பொறுத்து மதியம் 12:30 அல்லது பிற்பகல் 1:30 மணிக்கு முடிவடையும்.
- சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.
- மையம் விடைத்தாள் மற்றும் வினாத்தாளை மட்டுமே வழங்கும். மாணவர்கள் தங்கள் சொந்த பேனா மற்றும் தேவைப்பட்டால் வண்ணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் மற்றும் பிற சிறப்பு மருத்துவ தேவைகள் உள்ள மாணவர்கள் தங்கள் மருந்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.