![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NEET ReExam: நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
![NEET ReExam: நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் Can't order NEET re exam in 2024 Supreme Court NEET ReExam: நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/18/3eb4d27d2bc3ddd77504e3e727c8d70e172128969172789_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் சிலர் வாதாடி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞர் கூறும்போது, ''நீட் தேர்வை எழுதிய அனைத்து நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேர இருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தினால் போதும் என்றுதான் கேட்கிறோம்'' என்று கூறினார்.
எனினும் வாதத்தை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ''மறு தேர்வு என்பதை நடத்த உத்தரவிட முடியாது. ஒட்டுமொத்தத் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான் அதைச் செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ’’சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம். லட்சக்கணக்கான மாணவர்கள் விசாரணை முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினமே இந்த வழக்கின் விசாரணையை நடத்துவோம்’’ எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐடி சென்னை அறிக்கையை ஏற்கக் கூடாது
நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்ற ஐஐடி சென்னை வழங்கிய அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். ’’ஐஐடி சென்னை இயக்குனர் தேசியத் தேர்வுகள் முகமையின் ஆட்சி மன்ற உறுப்பினராக இருப்பதால் அவரது பங்களிப்பு சந்தேகத்திற்குரியது எனவும் ஐஐடி சென்னை அறிக்கையை ஏற்கக் கூடாது’’ எனவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.
எனினும் மத்திய அரசு சார்பில், ’’இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வை ஐஐடி சென்னை நடத்துவதால், அதன் தலைவர் தேசிய தேர்வுகள் முகமையின் குழுவில் இடம் பெற்று உள்ளார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான அறிக்கையைத் தயார் செய்த இயக்குனர் குழுவில் அவர் இடம் பெறவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.
தேசியத் தேர்வுகள் முகமையிடம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ''ஒட்டு மொத்தமாக நடைபெற்ற தேர்வில் 23.33 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், எத்தனை பேர் தேர்வு மையத்தை மாற்றினர்?'' என்று கேள்வி எழுப்பியது.
தேர்வு மையத்தை மாற்ற முடியாது; நகரத்தை மட்டுமே மாற்ற முடியும்
அதற்கு பதிலளித்த என்டிஏ, ''மாணவர்கள் தேர்வு நடைபெறும் மையத்தை மாற்ற முடியாது. நகரத்தை மட்டுமே மாற்ற முடியும். 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களில் அவகாசத்தை மேற்கொண்டனர். தேர்வு மையத்தைத் தேர்வுக்கு 2 நாள் முன்னதாக மட்டுமே கணினியே முடிவு செய்யும், இதனால் யாருக்கு எந்த மையம் என்று எந்த மாணவராலும் அறிய முடியாது'' என்று தெரிவித்தது.
’’1 லட்சத்துக்கு 8 ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேர் நகரத்தை மாற்றினர். சந்தேகத்துக்குரிய இடங்களுக்கு மாற்றப்பட்டதா?’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)