Bharathiar University Convocation: இந்தி சர்ச்சை.. ஒரே மேடையில் ஆளுநர் ரவி vs அமைச்சர் பொன்முடி காரசாரம்!
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இஸ்ரோ சிவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
கடந்த மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில் இன்று அமைச்சரும், ஆளுநரும் இணைந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் உடனான இரண்டு நாள் மாநாட்டை கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தினார். இந்த மாநாட்டிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அதிகாரிகள் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு வழங்காமல் தன்னிச்சையாக ஆளுநர் இந்த மாநாட்டை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதனையடுத்து, துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆளுநர், தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்த நிலையில், இன்று கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 37வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இஸ்ரோ சிவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி படிப்பை படிக்கின்றனர். இது தான் திராவிட மாடல். தமிழ்நாடு இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இது பெரியார் தோன்றிய மண் என்று பேசியதோடு, ஆளுநரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஹிந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. ஹிந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியை படிக்கட்டும். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஹிந்தியை மாற்று மொழியாக வைத்து கொள்ளலாம். எதிர்க்கவில்லை. ஆனால் கட்டாயம் ஆக்கக்கூடாது. இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி விற்கிறார்கள்” என்று பேசினார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசு மொழியை திணிக்கிறது என்பதில் உண்மையில்லை. அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் தந்து புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
எனினும், நேற்று மாலை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது ஆளுநரின் தனிப்பட்ட நிகழ்வு அதனால் அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் மற்றும் அமைச்சர் இருவரும் ஒரே மாவட்டத்தில் இருந்த நிலையில், அமைச்சர் இல்லாமல் நடைபெற்ற இந்த சந்திப்பு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகிய இருவரும் ஒரே மேடையில் வரும் திங்கள் கிழமை 931 மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்க உள்ளார்கள்.
இந்நிலையில், வரும் மே 16ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், பி.எச்.டி படிப்பை முடித்த 731 பேருக்கும் பல்வேறு நிலைகளில் மொத்தம் 931 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்தே பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்