'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்'- சென்னை தனியார் பள்ளியில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் பேச்சு
’’நான் படிப்பு, விளையாட்டு இரண்டையுமே விட்டுவிடவில்லை. இரண்டையுமே சமாளித்து, சிறப்பாக செயலாற்றி வந்தேன்.’’
ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கர் சென்னை, வேலம்மாள் பள்ளிக்கு வந்து, அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்' என்று தெரிவித்தார்.
ரூ.2.04 கோடி உதவித் தொகை வழங்கல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மனு பாக்கர். அவருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி, பெருமையுடன் வரவேற்பு அளித்தது. இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) நடைபெற்ற விழாவில் அவரது சாதனையைப் பாராட்டியதோடு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை ரூபாய் 2,04,75,570 (ரூபாய் இரண்டு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்து ஐந்தாயிரத்து ஐநூற்று எழுபது) வழங்கப்பட்டது.
சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் சாதனைபடைத்த 642 மாணாக்கருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகையானது இளம் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதையும் விளையாட்டுக் திறன்களை மென்மேலும் வளர்ப்பதற்காக கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உயர்த்தும் வகையில், வேலம்மாள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
2032-ல் ஒலிம்பிக் பதக்கம்
அதேபோல 2032-ல் வேலம்மாள் பள்ளி மாணவர்கள், ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் வகையிலான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மனு பாக்கர், ’’நான் படிப்பு, விளையாட்டு இரண்டையுமே விட்டுவிடவில்லை. இரண்டையுமே சமாளித்து, சிறப்பாக செயலாற்றி வந்தேன். என் பெற்றோர்கள், என் ரேங்க் கார்டை பரிசோதித்துக் கொண்டே இருப்பார்கள்.
பள்ளி காலத்தில் இருந்தே துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம்
என் அம்மா செய்யும் பொங்கல், தோசை ஆகிய தென் இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில், பள்ளி காலத்தில் இருந்தே துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் வந்து, பயிற்சி பெற்றேன். தமிழ்நாட்டில் பிரக்ஞானந்தா, நடிகர் விஜய் ஆகியோரை எனக்குத் தெரியும்.
நீங்கள் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு என்று தனித்த அடையாளம் முக்கியம். உடல் வலிமைக்காக பாக்ஸிங் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்’’ என்று மனு பாக்கர் தெரிவித்தார்.