Board Exams: 10, 12ஆம் வகுப்புகளுக்கு இனி 2 பொதுத்தேர்வுகள்; யாருக்கெல்லாம்? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்
நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறி உள்ளதாவது:
’’பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ போல, ஆண்டுக்கு 2 முறை 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதலாம். அதில் சிறப்பான மதிப்பெண்களை அவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். எனினும் இது முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுவதுதான். இதில் கட்டாயம் இல்லை.
தேவையில்லாத பதற்றம்
ஆண்டுக்கு ஒற்றை வாய்ப்பு மூலம் மாணவர்கள் தேவையில்லாத பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். தங்களின் வாய்ப்பு பறிபோய் விட்டதாகவும் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றும் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதைத் தவிர்க்க ஆண்டுக்கு 2 முறை தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நேர்மறையான விமர்சனங்களே வந்தன
ஒரு மாணவர் தான் முழுமையாகத் தயாராகி விட்டதாகவும் முதல் முறை பெற்ற மதிப்பெண்களே போதும் என்று முடிவு செய்துவிட்டாலும் அவர், 2ஆவது முறை தேர்வில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. எனினும் இதுகுறித்த அறிவிப்பு வெளியானபோது மாணவர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களே வந்தன. மாணவர்களைச் சந்தித்தபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2024 முதலே தேர்வை, ஆண்டுக்கு 2 முறை நடத்த முயற்சித்து வருகிறோம்.
கோட்டா தற்கொலைகள் மிகவும் சென்சிட்டிவான விவகாரம். எந்த ஓர் உயிரும் போகக்கூடாது. அவர்கள் நம்முடைய குழந்தைகள். நாம்தான் அவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதை கூட்டாகச் சேர்ந்து உறுதி செய்ய வேண்டும். பயிற்சி (coaching) தேவைப்படாமலே மாணவர்கள் படிப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
தேவை மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education - CABE) விரைவில் மாற்றி அமைக்கப்படும்.’’
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கோட்டாவில் என்னதான் நடக்கிறது?
போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கோட்டா பயிற்சி மையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை 60 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டு 23 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது இருப்பதிலேயே மிகவும் அதிகம் ஆகும்.
இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!