Anna University: 2 வாரம்தான் அவகாசம்; தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளியிடுவோம்.. அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியாகின. அன்றில் இருந்தே பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி சிறப்புக் கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 22ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 440-க்கும் மேற்பட்ட இணைப்பு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவை செயல்பட, ஆண்டுக்கு ஒருமுறை இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு கடந்த மே - ஜூன் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தரம் குறைந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், போதிய உட்கட்டமைப்பு வசதிகளில் 50 சதவீதப் பற்றாக்குறையோடு 225 பொறியியல் கல்லூரிகள் இருந்தன.
62 பொறியியல் கல்லூரிகளில் 25 - 50% பற்றாக்குறை இருந்தது. அதேபோல 23 பொறியியல் கல்லூரிகளில் முதல்வர்களின் தகுதி குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. 166 கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி போதாமை இருந்தது. இதில் 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று (ஜூலை 6) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், ’’தனியார் பொறியியல் கல்லூரிகள் 2 வாரங்களில் உரிய விளக்கம் தர வேண்டும்.
அதற்குள், அவை உடனடியாகக் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது. 2 வாரங்களில் விளக்கம் தராவிட்டால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடையாது. அதேபோல மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கல்லூரிகள் தரம் குறைந்தவை என்ற பட்டியலும் பகிரங்கமாக வெளியிடப்படும்.
தரமற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது’’ என்று அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்