Anna University Graduation : சாதி, மதம், அதிகாரத்தைவிட அறிவாற்றல்தான் பெரிது: பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Anna University Convocation 2022: சாதி, மதம், அதிகாரம் ஆகிய அனைத்தையும்விட அறிவாற்றல்தான் பெரிது என்று அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி, மதம், அதிகாரம் ஆகிய அனைத்தையும்விட அறிவாற்றல்தான் பெரிது என்று அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்க உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தற்போது தொடங்கி நடைபெற்று நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் பேசியதாவது:
''சாதி, மதம், அதிகாரம், வயது, அனுபவம், பதவி, ஆகிய அனைத்தும் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடும். ஆனால் அறிவாற்றல்தான் எல்லா இடத்திலும் அப்படியே இருக்கிறது. தமிழர்கள் எல்லோருக்கும் முன்னோடி.
அனைவரும் படிக்க வேண்டும். எல்லோருக்கும், எல்லோமும் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. அதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணை திறப்பதையே பெரும் பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3ஆவது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
பழமை வாதத்தை புறந்தள்ளி, புதிய கருத்துக்களை ஏற்று, பகுத்தறிவு பாதையில் நடைபோட்டால்தான் நீங்கள் பெற்ற பட்டத்திற்கு பெருமை''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்