Anna University: அண்ணா பல்கலை. துணை வேந்தர் பெயர், புகைப்படத்தை வைத்து மோசடி; அவரே கொடுத்த எச்சரிக்கை!
சில மோசடிக்காரர்கள், வாட்ஸ் அப் செய்தி மூலம் என்னைப் போலவே பிறரைத் தொடர்புகொள்கிறார்கள். என்னுடைய பெயர், புகைப்படம், போலியான மெயில் முகவரி ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஏமாற்றி வருகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ் பெயர், புகைப்படத்தை வைத்து மோசடி நடந்து வருவதாகவும் அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரே கொடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அதன் துணை வேந்தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
’’சில மோசடிக்காரர்கள், வாட்ஸ் அப் செய்தி மூலம் என்னைப் போலவே பிறரைத் தொடர்புகொள்கிறார்கள். என்னுடைய பெயர், புகைப்படம், போலியான மெயில் முகவரி ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஏமாற்றி வருகிறார்கள்.
மோசடிக்காரர்களின் செயல்களுக்கு இரையாகி விடாதீர்கள்
உங்களில் யாருக்காவது என் பெயரைப் பயன்படுத்தி செய்தி வந்திருந்தால், கவனமாக இருங்கள். அத்தகைய மோசடிக்காரர்களின் செயல்களுக்கு இரையாகி விடாதீர்கள். சம்பந்தப்பட்ட நபர்களை ரிப்போர்ட் செய்யுங்கள் அல்லது பிளாக் செய்துவிடுங்கள்.
அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் சில பேராசிரியர்கள் மோசடி செய்து, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியில் உள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி / பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் உள்ள 50% பொறியியல் கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் வரை ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்துத் தகவல் அளித்த அறப்போர் இயக்கம் அமைப்பு, மோசடியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மீது தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.