AICTE Academic Calendar: மாணவர்களே... அக்.30 வரை கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேரலாம்; ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை இதோ!
மாணவர்கள் நாடு முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர அக்டோபர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் சார்பில் திருத்தப்பட்ட அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி மாணவர்கள் நாடு முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர அக்டோபர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைமை வழிகாட்டு மையம்
அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொழில்நுட்பப் படிப்புகளாகக் கருதப்படும் பொறியியல், டிப்ளமோ படிப்புகளை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கட்டுப்படுத்தி வருகிறது. தேசிய அளவில் தலைமை வழிகாட்டு மையமாகச் செயல்படும் ஏஐசிடிஇ 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ஏஐசிடிஇ ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்லூரிகள் உருவாக்கம், மூடல், கல்லூரிகள் திறப்பு, கட்டணம் திருப்பி அளிப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகள் உள்ளிட்ட கல்லூரி சார்ந்த செயல்பாடுகளுக்கான தேதிகளை, வருடாந்திர கால அட்டவணையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டது. இதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி கடைசித் தேதி ஆக இருந்தது.
இதையும் வாசிக்கலாம்: NAS Exam: நவ.3-ல் மாநில திறனறித் தேர்வு; தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் 11 கோடி மாணவர்கள் பங்கேற்பு
அக்டோபர் 30ம் தேதி கடைசி
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 30 கடைசித் தேதியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தகுதியுள்ள மாணவர்களைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் 30ம் தேதி வரை தங்களின் கல்லூரியில் சேர்த்துகொள்ள வேண்டும்.
அதேபோல ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்க அக்டோபர் 30 ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். லேட்டரல் என்ட்ரி மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சேரவும் அக்டோபர் 30 ஆம் தேதி கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் முழு விவரங்களை https://aicte-india.org/sites/default/files/Revised%20Academic%20Calendar_2023-24_16102023.jpg என்ற இணைப்பில் காணலாம்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் இணைய முகவரி: aicte-india.org
இதையும் வாசிக்கலாம்: APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!